Wednesday, October 22, 2025

அரசியல் பேசும் நாகரிகம்: வெறுப்பைத் தவிர்த்து நம்பிக்கையைப் பரப்புவோம்.

அரசியல் பேசும் நாகரிகம்: வெறுப்பைத் தவிர்த்து நம்பிக்கையைப் பரப்புவோம்.
தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்தில்
பொது இணைய தளங்களான வாட்சப் முகநூல் இன்ஸ்டாகிராம்
ஆகியவற்றில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை விவாதிப்பது சகஜம் ஆகிவிட்டது.

அவ்வாறு பேசும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். அவரவர்க்கு தனியான சார்பு நிலைப்பாடு இருக்கலாம். ஒரு கருத்தை மற்றவர் சொல்லும் போது அதற்கு நீங்கள் உங்களுடைய எதிர்ப்பை அறத்தோடு தெரிவிக்கலாம் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடலாம். ஆனால், 

இன்றைய சமூக ஊடகங்களில் அரசியல் பேச்சு என்றாலே பொது ஊடகங்களில் வாக்குவாதம், குற்றச்சாட்டு, நையாண்டி, இழிவுபடுத்தல், தரக்குறைவாக பேசுதல் சண்டையிடுதல் 
இதுதான் வழக்கமாகி விட்டது. ஒருவரை ஒருவர் குறை கூறி, அவமானப்படுத்தும் அளவுக்கு பேச்சு மாறி விடுகிறது. இது நாகரிகமான விஷயமாக இருக்குமா?

அரசியல் தொடர்பான விவாதங்கள் நாட்டை முன்னேற்றும் கருத்துக்களின் தளம். ஆனால், அதனை வெறுப்பின் மேடையாக்கி விட்டால் அது விவாதமாகாது, வாக்குவாதமாகி விடும். பேசும் ஒவ்வொரு சொலிலும் மரியாதையும் நாகரிகமும் இருக்க வேண்டும்.
நாம் பேசும் அரசியல் பேச்சு நம்பிக்கையை உருவாக்க வேண்டும், வெறுப்பை அல்ல.

அரசியல்வாதிகள் தங்கள் இடத்தில் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், தங்கள் தொண்டர்களை ஊக்குவித்து, அவர்களை
தங்களுக்கென்று இணையத்தில் போராடும் வீரர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். நம்மை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கும் நிலை வருகிறது. 

இன்று எதிரணியில் இருக்கும் கட்சிகள் நாளை ஒன்றாகி விடலாம். அவர்களுக்காக நாம் இணையத்தில் சண்டை போட்டு உறவுகளை நட்புகளை இழந்துவிடுகிறோம். 

யோசித்துப் பாருங்கள். அவர்களது அபிமானிகளான நம்மை இணையதளப் போராளிகளாக தூண்டிவிட்டு பேச வைத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள் 

இதனால்தான் பலர் “அரசியல் என்பது ஒரு சாக்கடை” என்று நினைக்கிறார்கள். அரசியல் பேச்சு அருவருப்பாகிவிட்டது என்று பலரும் கூறுகிறார்கள். அதனாலேயே பல வாட்ஸ்அப் குழுக்களிலும், முகநூல் குழுக்களிலும் அரசியல் பற்றி பேசுவதையே மக்கள் விரும்புவதில்லை.

ஆனால் உண்மையில் அரசியல் என்றால் அது அழுக்கு அல்ல; அழுக்கை உருவாக்குவது நமது பேச்சின் நடைமுறைதான்.
“குறை சொல்வதற்கு முன் தீர்வு சொல்லப் பழகுங்கள். ஒரு மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும்.”

அரசியல் குறித்து பேசுவது தவறல்ல; ஆனால் பேசும் முறையில் மரியாதை இருக்க வேண்டும். ஒருவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவமதிக்கக் கூடாது. “நாம் இதைச் செய்ய முடியும்”, “எங்களால் நாடு முன்னேறும்” என்று நம்பிக்கையுடன் பேசுங்கள். அது தான் நாகரிகமான அரசியல் உரையாடல்.

சமீபத்திய ஆய்வுகள், சமூக ஊடக விவாதங்களில் 50%க்கும் மேற்பட்டவை வெறுப்பு அல்லது இழிவுபடுத்தும் தொனியைக் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன. குறிப்பாக மாற்றுக்கருத்து கொண்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும் தனிமனித தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துள்ளது. தான் சார்ந்துள்ள அணிக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களையும் அள்ளி விடுகிறார்கள்.

இந்தப் பழக்கம் மாறினால் தான் சமூக ஒற்றுமையும் அரசியல் விழிப்புணர்வும் உருவாகும்.
நாம் எவ்வாறு பேசுகிறோம் என்பதே எதிர்காலத்தை உருவாக்கும். அரசியல் பேசும் போது அடிப்படை நாகரிகம் மற்றும் அறத்தோடு பேசுங்கள்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Friday, October 17, 2025

ஒரு வருடம்…ஒரு நினைவு…ஒரு மரியாதை

*மறவாமல் நினைவுகூரும் மரபு* 
“ஒரு வருடம்…ஒரு நினைவு…ஒரு மரியாதை…”

நம்முடைய குடும்பத்தில் ஒரு நபர் இறந்துவிட்டால் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பண்டிகைகள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு மரபு ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கிறது. 

ஆனால் நாளடைவில் அந்த மரபை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும் துயரமும் கலந்த ஒரு நெடிய பயணம்.
அதில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்திற்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்ந்து மறைகின்றனர். 

ஒரு குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால், அந்த வீட்டில் ஒரு வருடம் எந்தப் பண்டிகையும், விழாவும், இனிப்பும், புத்தாடையும் இல்லாமல் அமைதியாக இருப்பது — என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல. அது மறைந்தவர்களுக்கு நாம் செய்யும் ஒரு மரியாதை.
அந்த நினைவு வருடம் என்பது ஒரு துக்க ஆண்டாக அல்லாமல் அவருடைய வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் ஒரு சிறிய அங்கீகாரம். மறைந்தவருக்கான பெருமையின் சின்னம்.

“இந்த வருடம் எங்களுக்குத் தீபாவளி/ கிறிஸ்மஸ் அல்லது ரம்ஜான் இல்லை…” என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அவரவர் குடும்ப வழக்கத்தின் படி ஒரு சிலர் கோவில்களுக்கு அல்லது மலைக் கோவில்களுக்கு செல்ல மாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளை தங்கள் குடும்பத்தில் நடத்தவோ கலந்து கொள்ளவோ மாட்டார்கள். தங்கள் குடும்பத்தில் வழக்கமாக செய்யும் எந்த கொண்டாட்டங்களையும் செய்யாமல் அந்த ஒரு வருடம் துக்கம் அனுஷ்டிப்பார்கள்.

இந்த வருஷம் எங்களுக்கு பண்டிகை இல்லை என்ற
அந்த ஒரு சொல்லில் துன்பம் இருக்கலாம், ஆனால் அதற்குள் நன்றியும் இருக்கிறது.
அந்த வீட்டில் ஒரு விளக்கு ஏற்றப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்களை நினைக்கும் இதயங்களில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும் — இறந்தவர்
அந்த வீட்டைக் கட்டியவராக, அந்தக் குடும்பத்தை நிலைநிறுத்தியவராக, அந்தப் பிள்ளைகளை வளர்த்தவராக சிலர் தங்கள் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்து விடுகிறார்கள்.
சிலர் 80 வயது, சிலர் 100 வயது கடந்தும் குடும்பத்தின் தூணாக நிற்பார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இன்பங்களை ஒத்தி வைத்து, குடும்பத்திற்காக சிலுவைகளை சுமந்தவர்கள்.

அப்படிப்பட்டவர்களின் நினைவுகூர்ந்து ஒரு வருடம் பண்டிகைகளை ஒத்தி வைப்பது என்பது
ஒரு துக்க வெளிப்பாடு அல்ல — அது ஒரு தலைமுறை நன்றி செலுத்தும் வழி.

 ஆண்டாண்டு காலங்கள் அழுது புரண்டாலும் மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை என்பது பழமொழி. குடும்பத்தில் ஒருவர் மறைந்தாலும் யாரும் வருடக் கணக்கில் மூலையில் அமர்ந்து அழுது கொண்டே இருக்க ப்போவதுமில்லை. எவ்வளவு முக்கியமான அன்புக்குரிய நபரை இழந்திருந்தாலும் அடுத்தக் கட்டத்தை நோக்கி வாழ்வு நகர்ந்து தான் ஆக வேண்டும்.

அதே நேரம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மறைந்திருந்தாலும் பிராக்டிக்கலாக இருக்கிறோம். அவர்களது நினைவு எங்கள் மனதில் உள்ளது. நீங்கள் சொல்லும் சடங்கு சம்பிரதாயங்கள் போலித்தனமானவை என்று கூறிக்கொண்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது ஒரு வகையில் இறந்தவருக்கு நாம் செய்யும் அவமரியாதை. 

பண்டிகைகள் ஆண்டுதோறும் வரும்,
ஆனால் ஒருவரின் அன்பும் அர்ப்பணிப்பும் ஒருமுறைதான் —
அவரை நினைத்துப் போற்றுவதற்காக ஒரு வருடம் ஒதுக்குவது (இறந்தவர் குடும்பத்தில் யாராக இருந்தாலும் எந்த வயதில் இறந்திருந்தாலும்)
அவரது வாழ்வின் பெருமையை வெளிப்படுத்தும் சிறந்த வழி.

அந்த நினைவு வருடத்தில் வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு இறந்தவர் படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபட்டு இந்த வருடம் நம் தாத்தா/ பாட்டி இறந்து விட்டார். அதனால் நமக்கு பண்டிகை இல்லை. இந்த குடும்பம் இந்த நிலைக்கு வருவதற்கு அவர் தான் காரணம். அவர் இந்த குடும்பத்திற்காக எவ்வளவோ விஷயங்களை/ தியாகங்களை செய்திருக்கிறார் என்று நினைவுகூறுவது என்பது நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் ஒரு அமைதியான பாடம். 

 *வாழ்க்கைச் சிந்தனை* 

“மனிதன் மறைந்தாலும், அவன் மனிதத்துவம் மறக்கப்படக்கூடாது.”

 “ஒரு வருடம் பண்டிகை தவிர்ப்பது துக்கமல்ல;
அது நன்றி செலுத்தும் ஒரு வடிவம்.”

~ மகேந்திரன்