வாழ்வைப் போலவே நம் இறப்பும் மரியாதையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள்.
இறுதி மரியாதைக்கு பின்னும் ஒரு வாழ்வின் முடிவை மரியாதையாக முடிக்கும் தோழர்கள் தான் மயானத்தொழிலாளர்கள்.
மயானம் மட்டுமல்ல மரியாதையும் தேவை – மயானப் பணியாளர்களுக்கான குரல்............
ஈரநெஞ்சம் அறக்கட்டளை
இன்றைய சமூகத்தில் மாற்றத்திற்கான ஆரம்பம், மனங்களிலிருந்து உருவாகிறது. வார்த்தைகளும் அதன் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. முன்னேற்றம் என்றால் தொழிலில் மட்டும் அல்ல; பொருளாதாரத்தில் மட்டுமல்ல. இறுதிநிலை பணியாளர்களாக இருந்தாலும் அவர்களையும் மனித நேயத்தோடு கண்ணோக்கி அவர்களும் மனிதர்கள் தான் என்று உணர்வதில் தான் மனித குலத்தின் உண்மையான வளர்ச்சி இருக்கிறது.
தற்போதும் பலர் மயானங்களில் பணியாற்றும் நபர்களை "வெட்டியான்" என்றே அழைக்கின்றனர். இந்தச் சொல்லின் பின்னணியில் பாழ்மையாகவே படும் ஒரு வரலாறு இருக்கலாம். ஆனால் இன்று இந்தச் சொல், அந்த தொழிலின் பெருமையை காட்டாமல், ஒரு தரப்பினரை ஒதுக்கி வைக்கும் வசைச்சொல்லாகவே
பரவலாக நடைமுறையில் உள்ளது. மயான தொழிலாளர்கள் எவ்வளவுதான் அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களது பெயர் தெரிந்திருந்தாலும் கூட வெட்டியான் என்றே அழைக்கிறார்கள். குறைந்தபட்ச மரியாதையும் மனித நேயமும் இல்லாமல் தான் அவர்களை நடத்துகிறார்கள் என்று மயானத் தொழிலாளர்கள் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாம் மற்ற சமூக பிரிவுகளை மரியாதையுடன் "துப்புரவுப் பணியாளர்", "மாற்றுத்திறனாளி", "திருநங்கை" என அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கூட "பாலியல் தொழிலாளர்கள்" என்று தான் கூறுகிறோம். அதேபோல் இடுகாட்டில் இறுதி அடக்கம் செய்வதன் மூலம் சமூகத் தூய்மை பணியில் தங்களது கடின உழைப்பைத் தரும் மயானப் பணியாளர்களும் அந்த மரியாதைக்கு தகுதியானவர்கள் தான்.
ஒரு உயிரின் பயணத்தின் கடைசி கட்டத்தைக் கையாண்டு, மரியாதையுடன் பூமிக்குள் புனிதமாக இணைத்திடும் பணியில் இவர்களின் பங்கு தீர்க்கமாயுள்ளது.
மரணம் தான் நிஜம். அந்த நிஜத்திற்குத் துணையாக இருப்பவர்கள், நம் வாழ்க்கையிலும் முக்கியமானவர்கள். இவர்களின் பணியை எத்தனை பேரால் செய்ய முடியுமென்று யோசித்தீர்களா? எத்தனை பேரால் அந்த மனஉறுதி, கட்டுப்பாடு, கருணை, பொறுமை கொண்டு இந்தப் பணியை செய்ய முடியும்?
எனவே தான் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில், நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் –
"வெட்டியான்" எனும் பழமை வாய்ந்த ஆனால் இன்றைய சூழலில் தவறாக பயன்படுத்தப்படக் கூடிய சொல்லை நீக்கி "மயானப் பணியாளர்" அல்லது மயான உதவியாளர்கள் என்ற மரியாதைமிக்க சொல்லை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
இந்தப் பெயர் மாற்றம் என்பது ஒரு தொடக்கம் மட்டும்தான். சமூக மாற்றத்தின் வித்து சிறிய விதையாக இருந்தாலும் நாளை பெரும் விருட்சமாக மலரும் என்பதில் ஐயமில்லை.
*உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க*
~~~~~~~~~~~~~~~~~~~
"ஏன் டா மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலை ...?"
"சார் இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்னை எல்லோரும் _*வெட்டியான் வீட்டு பிள்ளை*_ன்னு கிண்டல் பண்றாங்க நான் இனி போகமாட்டேங்க" .
ஆமாங்க இது நான் மிகவும் மதிக்கும் மயானத்தில் பணிபுரியும் என் சகோதரி போன்ற வைரமணியின் பேத்தி தான் அந்த சிறுமி. பள்ளியில் இவங்க குடும்பத்தொழிலை சக மாணவர்கள் ஏளனமாக பேசியது அந்த பிஞ்சு மனதில் அவ்வளவு காயத்தை உண்டாக்கி உள்ளது.
_*விபரம் தெரியாத குழந்தைகள் மட்டும் இல்லைங்க விபரம் தெரிந்த படித்த மேதாவிகள் முதல் படிக்காதவர் வரை பலரும் இப்படித்தான் மரியாதை குறைவாக பிறர் மனதை புண் படுத்தி பேசுவதே நாகரிகமாக எண்ணி பெருமைபட்டுக்கொள்கிறார்கள்.*_
நீங்கள் யாரும் கவனித்து இருக்கீங்களா , ஏன் அதில் நீங்கள் கூட ஒருவராக இருந்திருக்கலாம் , மயானத்தில் நாம் மதிக்கும் மாண்பான நம் குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறோம் ... ஒரு சடங்கு முடிந்ததும் அந்த தொழிலாளியை இறந்தவரின் உறவினர்கள் அழைக்கும் தோரணை இருக்கிறதே... மனித நேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக வருந்த கூடும் . " எங்க டா அந்த வெட்டியானை வர சொல்லு .. எங்க டா போயிட்ட , என்ற உரத்த குரலில் கத்துவதும் , இல்லங்க சாமி இங்கே தானுங்க இருக்கேன் என்று அந்த மயான தொழிலாளி தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி கூனி நிற்பதும் உனக்கு எவ்வளவு கூலி , ஐயா 3000 ங்க என்று கூற ... இந்தா இவ்வளவு தான் இது போதும் என்று பேரம் பேசுவதற்கு கூட தகுதியற்றவர்களாக எண்ணி ஒன்றுக்கு பாதியாக கூலி கொடுத்து விரட்டிவிடும் நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த கூலி கொடுப்பது கூட எப்படி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு வேட்டியை தரையில் விரித்து வைத்துக் கொண்டு அதில் அந்த பணத்தை தூக்கி போடுவார்கள் , அந்த மயான தொழிலாளி சற்று தள்ளி இருந்து வேட்டியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு செல்வார்.
அது சரி வெட்டியானை வெட்டியான்னு கூப்பிடாம எப்படி கூப்பிடுறது ன்னு உங்களுக்கு தோணலாம்... அவரின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லி அழைக்கலாமே... அதனால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் தெரியுமா..! நீங்கள் அவர்கள் பார்த்த வேலைக்கு தான் கூலி தருகிறீர்கள் , பிச்சை கிடையாது அதை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கையில் பணத்தை கொடுங்கள்... அப்படி பெரியவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்து சிறியவர்களும் அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள் ..
மனித உடல்களை எரிப்பதற்கும் , அடக்கம் செய்வதற்கும் மட்டும் நாம் அவர்களை பயன் படுத்திக் கொள்வது இல்லை. எங்காவது இறந்து கிடக்கும் விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலை விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும் பயன் படுத்திக் கொள்கிறோம் . இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு குவாட்டர் பாட்டில் சரக்கு அவ்வளவு தான்.
அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனையில் உதவி செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும் நீரில் மூழ்கி இறந்து போன அழுகி கிடக்கும் சடலம் எடுப்பதும் என பயன் படுத்திக் கொள்கிறோம் .
ஒரு கேள்வி? ஏன் பல தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த தொழிலை செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு மயான தொழிலாளியின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு ஆகக் கூடாது. முதலமைச்சராகவோ ஏன் ஆகவில்லை? ஏன் அவர்கள் குடும்பம் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை? கல்வி பெற அவர்களை நாம் அழைக்கும் அந்த பெயர் முட்டுக்கட்டையா?
ஆம் வெட்டியான் என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் அவர்களை ஒதுக்கியும் , ஒடுக்கியும் முன்னேற விடாமல் மயானத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறோம் . இந்த தொழிலுக்கு அவ்வளவு சுலபமாக யாரும் வந்து விட முடியாது , அந்த வேலையை செய்திடவும் முடியாது. இவர்கள் சமுதாயத்தில் முன்னேறிவிட்டால் என்ன என்ன விபரீதம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று .
ஒன்று தெரியுமா தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் தான் இந்த மயான தொழிலாளர்கள் , ஆனால் இந்த தொழில் செய்வதால் சக தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் அதாவது இவர்களுடைய உறவினர்களே இவர்களிடம் நெருங்குவது இல்லை... எவ்வளவு பெரிய சாபக்கேடு இது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கொள்ளி வைப்பதை அவ்வளவு முக்கியத்துவமாக பார்க்கிறோம். ஆனால் கொள்ளி வைத்து முடித்ததும் அனைத்து உறவினரும் அங்கிருந்து சென்று விட்ட பிறகு , இந்த மயான தொழிலாளர் குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என யாவரும் பிணத்தை சரியாக பார்த்து பார்த்து எரிப்பது யாருக்கு தெரியும்.
தொடர்ந்து பிணங்களை எரிப்பதால் அவர்களில் பலரும் சுவாச சம்பந்தமான நோய்வாய்ப்படுகிறார்கள். 25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார். பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்கள் மன ரீதியான பாதிப்புக்குள்ளாவது எத்தனை பேருக்கு தெரியும் .
பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் பெறுவது போன்ற எதற்கும் இவர்களுக்கு வழி தெரியாது.
அரசு தரப்பில்
அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திரு.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிகளுக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பணி நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன என்பதுக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான பணியாளர்கள் சங்கம்" என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தது . இம்மாநாட்டில், பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாத ஊதியம், வெட்டியான் என்ற பெயரை நீக்குவது , மயான தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்றவை.
ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சராக இருந்த திருமதி.ஏ. தமிழரசி அவர்களின் முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல்.
அரசாங்கத்தில் வேலை பார்க்கும் தலைமை பதவியில் இருப்பவரில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன? முதலில் சக மனிதர்கள் இவர்களையும் மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ?
மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி தானே.
தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் . பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு கூட வழங்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் மயான தொழிலாள நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது நம்மைப்போன்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா..! எங்கேயோ உலகத்தின் மூலையில் யாருக்கோ நடக்கும் அநீதி கண்டு சமூக ஊடகங்களில் பொங்கி எழும் இளைஞர்கள் இது போன்ற நம் வாழ்வியலில் கட்டாயம் இருக்க வேண்டிய இவர்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே... இளைஞர்கள் தம் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு இது போன்றவர்கள் மனதை புண்படுத்தி பேசக்கூடாது என அறிவுறுத்தலாம். இளைஞர்கள் நினைத்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் உருவாகும்...
இப்படி எல்லாம் எழுதி விட்டு அந்த மயான தொழிலாளி வைரமணி அவர்களிடம் கொண்டு போய் படித்து காட்டினால் , அந்த வைரமணி என்ன சொன்னாங்க தெரியுமா.
" இத்தனை ஆண்டு காலம் எந்த மனிதர்களும் எங்க முகம் பார்த்து பேசியது இல்லை . ஊருக்குள்ள என்ன நடக்குதுனே தெரியாது , வரவங்க போறவங்க எல்லாம் எங்களை வெட்டியான் வெட்டியான்னு தான் கூப்பிடறாங்க அதுவே இன்னும் மாத்திக்க தெரியாத இந்த மனுசங்க தானா எங்களுக்கு இவ்வளவு உதவி செய்ய போறாங்க . எங்களை எல்லாம் முன்னேறவே விட மாட்டாங்க சார் நீங்க ஏனுங்க சார் வெட்டியா இப்படி எழுதிட்டு உங்க நேரத்தை கெடுத்துட்டு இருக்கீங்க ,
( கோவை சங்கனூர் பகுதியில் உள்ளது மையானத்தில் பணிபுரியும் பழனியம்மாள் கூறுவதை கேளுங்க )
முதலில் அந்த வெட்டியான்னு சொல்றதை நிப்பாட்ட சொல்லுங்க சார் . நாங்களும் எங்க குழந்தைகளும் வருங்கால தலைமுறைகளும் நல்லா இருப்போம். உங்களுக்கு புண்ணியமா போகட்டும் "
பெண்கள் எல்லோருமே அவரவர் தகுதிக்கேற்ப உழைக்கின்றார்கள். ஆண்களை காட்டிலும்
பெண்களது சாதனை தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது .
பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது . அந்த வரிசையில்
ஆச்சரியமூட்டும் ஒரு துறையிலும் ஒரு பெண் சாதித்து வருகிறார்.
பிணம்
என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய
சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த
காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. புலியை முறத்தால் விரட்டிய பெண்ணின் வம்சம்
கொண்டவளோ... இவள் நடு சாமத்தில் தனி ஒருத்தியாக சிதையை எரியூட்டுகிறாள்.
கோவையில் சொக்கம் புதூர் மயானத்தில் வெட்டியானாக (வெட்டியாள்) 30வயது
வைரமணி என்னும் பெண்மணி.
நான்
இவரை சந்தித்த சூழ்நிலை என்னால் மறக்க முடியாத ஒன்று. மிக இக்காட்டான ஒரு
சூழ்நிலையில் எனக்கு பெரும் உதவி புரிந்தவர் இந்த வைரமணி. சுட்டாலும் இவரை
மறக்காது அப்படி ஒரு உதவி , ஒரு ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்ய வழக்கமாக
நல்லடக்கம் செய்துவரும் அமைப்பில் கூட அந்த தினத்தில் எனக்கு உதவ
கைவிரித்து விட்டனர் , உதவிக்கு அழைத்த உடன் இருந்த நண்பர்கள் கூட உதவ
முன்வரவில்லை, சடலத்தை நடு வீதியில் வைத்துக்கொண்டு அல்லல் பட்ட நிலையில்
வைரமணியை அழைக்க "அண்ணா நான் இருக்கேன்... நீங்க கொண்டுவாங்க... நான்
செய்து தரேன் பார்த்து கொள்ளலாம்" என்ற வார்த்தை .
அப்போது
அவர் கூறிய இந்த வார்த்தைக்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் மிகையாகாது.
அந்த உதவிக்கு எந்த அளவுக்கு பணம் கொடுப்பது... அப்படி கொடுத்தால் மட்டும்
அதற்கு நிகராகிடுமா ? . எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் நேரில்
வந்து உதவுவது இல்லை , ஆனால் அவர் சொன்ன "அண்ணா நான் இருக்கேன்" என்ற
வார்த்தை கடவுளின் குரல் ஒலித்தது போல இருந்தது .
இந்த
பெருந்தன்மையான வார்த்தைக்கு தகுந்த பலனை அவர் பெற வேண்டும் . என்று அன்றே
என் மனதில் தோன்றியது. என்னுடைய நம்பிக்கையும் அவரது புனிதமான பணியும்
உன்னதமானதாக இருந்தால் அவர் சொன்ன வார்த்தைக்கும் உதவிக்கும் இறைவனால்
மட்டுமே தகுந்த ஊதியம் கொடுக்க முடியும் .
இவரது
துணிச்சல் , இவரது பணியைப்பற்றி என்னுடைய பத்திரிக்கை நண்பர்களிடம்
கூறியதில் , இவரைப்பற்றி கோவை முழுவதும் பல நாளேடுகளிலும்
தொலைக்காட்சிகளிலும் இந்த பெண்ணின் சிறப்பை அறிமுகப்படுத்தினார்கள் . அதன்
மூலம் வைரமணிக்கு அவரது பணியை ஊக்குவிக்கும் அளவில் "நேசம்" என்ற அமைப்பு
ஆயிரம் பேர் மத்தியில் கவுரவித்து விருதும் வழங்கியது.
எதுவும்
இறைவனது அருள் இல்லாமல் நடந்திடாது , இறைக்கு இணையான பணியை
மேற்கொள்ளும்போது இறைவனே இறங்கிவரமாட்டானா என்ன , எல்லாம் அவன் செயல் .
அமெரிக்க பத்திரிகையில் வைரமணி
"அண்ணா
நான் இருக்கேன்" என்ற வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன இவரது
உன்னதத்தை இன்னும் உலக மக்களுக்கும் அறிந்தாகவேண்டும் என்று அமெரிக்காவில்
மிகவும் பிரபலமான "தென்றல்" தமிழ் மாத இதழில் இவருடைய பேட்டிக்கு இடம்
கிடைத்தது அதுவும் வைரமணியை நான் நேர்க்காணல் செய்து.
நானாக
ஒருவரை நேர்க்காணல் செய்து பத்திரிக்கையில் எழுதுவது அதுவும் அமெரிக்க "
தென்றல் " மாத இதழில் வெளிவந்தது எனக்கு அந்த பத்திரிக்கை கொடுத்த
மரியாதையாகவே எண்ணுகிறேன் . அந்த வாய்ப்பை எனக்களித்த அரவின் சுவாமிநாதன்
அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
"தென்றல்"
மாத இதழில் முகப்பு அட்டையில் வைரமணியின் புகைப்படத்துடன் , அமெரிக்காவில்
தென்றல் மாத இதழில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய கவுரவமாக
கருதப்படுகிறது. அதிலும் முகப்பு அட்டையில் புகைப்படம் கிடைப்பது என்பது
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமும்
அறிய கவுரவம் ஆகும். அதில் வைரமணி செய்தி நவம்பர் 1 ஆம் தேதி பிரசுரத்தில்
வெளிவந்துள்ளது.
இந்த
சூழ்நிலையில் எனக்கு உதவ அவர் கூறிய "அண்ணா நான் இருக்கேன்" என்ற
வார்த்தைகளுக்கான வெகுமதி இறைவன் அவருக்கு கொடுத்து விட்டதாகவே நான்
எண்ணுகிறேன். எங்கோ ஒரு மூலையில் சொக்கம்புதூரில் மயானத்தில் இருக்கும்
வைரமணி இன்று அமெரிக்க மக்கள் முதல் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நிச்சயம்
இடம் பிடித்திருப்பார் என்று திருப்தியும் எனக்கு ஏற்படுகிறது. இவரை
போன்றவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக எல்லோரும் எண்ணும் நிலையில் வைரமணி மிக
உயரிய இடத்தை அடைந்து விட்டார். இவரை பற்றி படிக்கும் எல்லோருக்கும்
நிச்சயம் பெண்கள் மீதான மதிப்பு மேலும் கூடும், இதை எல்லோரும் படிக்க
வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை
ஆனால் படித்து பாருங்கள். இவரை போன்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
ஆதரவற்றவர்கள் சாலையோரமாக உடல்நலம் இல்லாமல் சாலையில் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கோ அல்லது காப்பகங்களிலோ சேர்த்துவருகிறோம் .
அப்படி
சேர்க்கப்படும் நபர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என்றால்
அவர்களை நல்லடக்கம் செய்யும் பணி இங்குள்ள ஒரு அமைப்பின் உதவியுடன்நாங்களே
அடக்கம் செய்கிறோம் ,இந்த நாள்வரை அப்படித்தான் செய்துவந்தோம் .
இப்படி
இருக்க கடந்த சிலநாட்களுக்கு முன்னாள் எங்களால் சாலையில் உடல்நலம்
இல்லாமல் இருந்த ஒரு பெரியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டு ,சிகிச்சை பலனின்றி காலமானார் , அவரது பிரேத உடலை காவல்துறை
உதவியுடன் நல்லடக்கம் செய்ய அந்த அமைப்பை அணுகும் போது எப்போதும் அடக்கம்
செய்யும் இடத்தில வெட்டியான் இல்லை ஆகையால் நீங்கள் வேறு வழியை
பார்த்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்தார்கள் .
என்ன செய்வது என்று
தெரியவில்லை , நாங்களாக மயானத்திற்கு பிரேத உடலை கொண்டு சென்று நல்லடக்கம்
செய்ய வேண்டுமானால் , குழியை வெட்டுவதற்கே 2000 வரை கேட்கிறார்கள் , கையில்
அந்த அளவிற்கு பணம் அப்போது இல்லை மயானம் செல்ல தயாராக பிரேத உடல்
மருத்துவ மனை சவக்கிடங்கில் இருந்து வெளியே கொண்டு வந்தாயிற்று ,
தன்
நல்ல செயலே தன்னை காக்கும் என்பதற்கேற்ப வைரமணி என்னும் ஒரு 30வயது பெண்
வெட்டியானின் தொடர்பு சொக்கம்புதூர் மயானத்தில் கிடைத்தது , ஒரு பெண்
மயானத்தில் தன்னந்தனியாக குழியை வெட்டி பிரேதங்கள் வந்தால் தனியாகவே
குழிக்குள் இறக்குவதும் , இரவானாலும் பிரேதத்தை எரிப்பதும் தெரியவந்தது,
அவரது அனுமதியோடு எனது நண்பன் பழனியப்பன் மூலமாக வைரமணியை, அவரது துணிச்சல்
பற்றி பத்திரிக்கையின் மூலமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ,
இந்த
இக்கட்டான சூழலில் அந்த வைரமனியின் ஞாபகம் வந்தது நாங்கள் (பிணத்துடன்
இருப்பதும் அடக்கம் செய்ய வழிதெரியாமல் இருப்பதும்) உடனடியாக அவரைத்
தொடர்பு கொண்டு எங்களுடைய இக்கட்டான சூழ்நிலையை தெரிவித்தோம் .
அதற்கு
வைரமணி கவலையை விடுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் அந்த நபர்
இறப்பிற்கான தகுந்த சான்றிதழை கொண்டுவாருங்கள் அதுபோதும் என்றார் , எங்கள்
நெஞ்சில் பால்வார்த்த வைரமணிக்கு நன்றி சொல்லிவிட்டு உடனடியாக பிரேதத்தை
ஆம்புலன்ஸ் மூலமாக சொக்கம்புதூர் மயானத்திற்கு கொண்டு சென்று அந்த முதியவரை
வைரமணி வெட்டிவைத்த குழியில் நல்லடக்கம் செய்தோம் . அடக்கம் செய்ததும்
பணத்தை நாளை கொடுத்தால் போதும் அதுவும் மிக குறைந்த அளவுமட்டுமே போதும்
என்ற ஈர மனது கொண்ட வைரமணி அப்போது எங்கள் கண்ணிற்குகடவுளைப் போல
தெரிந்தார் .
அந்த வைரமணிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல்
இருகை கூப்பி வணங்கினோம் வெட்டியான் வைரமணிக்கு காலில் விழுந்து நன்றி
சொல்லி இருந்தாலும் அது மிகை ஆகாது .
எனது வேண்டுகோளுக்கு இணங்க வெட்டியான் வைரமணியை பற்றி நாளிதழில் கட்டுரை எழுதிய எனது நண்பர் திரு . பழனியப்பனுக்கும் .
பிணத்தை
கையில் வைத்துக்கொண்டு எங்கு , எப்படி அடக்கம் செய்வது என்று தெரியாமல்
விழித்திருக்கும் வேளையில்உதவிய வைரமணிக்கும் காலம் முழுவதும் நன்றி
செலுத்தக் கடமை பட்டுள்ளோம். இவர்கள் செய்த உதவிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை.
~மகேந்திரன்
பெண்கள் நாட்டின் கண்கள்!, மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!, முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன் கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை! இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன் மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான். ஆம்! நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்! நம்மை பெற்றவளும் பெண்தான்! நம்மை தாங்குவதும் பெண்தான்! பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?
பெண்கள் சாதிக்காத துறை எதுவும் இல்லை. எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு ஈடாக
பெண்களும் சாதித்து வருகிறார்கள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள்
சளைத்தவர்கள் அல்ல என்பதை பல சமயங்களில் பெண்கள்
நிருபித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . பெண்ணின் துணிச்சலும் அந்த
அளவிற்கு உயர்ந்துவருகிறது . பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது
இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள்
மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.
கோவையில் ஒரு மயானத்தில் வெட்டியானாக வைரமணி 30வயது என்னும் பெண்மணி தனது
பத்துவயது முதலாக தனது தந்தை கருப்புசாமி பணி புரிந்த வெட்டியான் வேலையை
அவரைத்தொடர்ந்து இருவது வருடமாக செய்துக்கொண்டு இருக்கிறார் . இவருக்கு
ரஜி என்னும் கணவரும் கட்டிடத் தொழிலாளி, இரண்டு மகள்களும் , ஒருமகனும்
இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கும் வாழ்கையை நடத்துவதற்கும் கணவனின்
சம்பாத்தியம் போக வைரமணியின் இந்த வெட்டியான் வேலையும் தான்
கைகொடுக்கிறதாம்.
இதுவரை ஆயிரக்கணக்கான பிணங்களை அடக்கம்
செய்துள்ளதாகவும் , அதற்கு குழிகளை வெட்டுவது பிணங்களை குழிக்குள்
இறக்குவது மட்டும் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு இறந்தவர்களின் சமுதாயப்படி
வெட்டியானின் சடங்குகள் என இந்த வைரமணியே பார்த்துக்கொள்கிறார். நேரம்
காலம் பார்ப்பது இல்லை இரவு 10, 11 மணி ஆனாலும் தனியொருவராகவே சுடுகாட்டில்
குழிகளை வெட்டி பிணங்கள் வந்தால் அதை அடக்கம் செய்வாராம் .
வைரமணி மேலும் கூறும்போது வெட்டியான் பணி நியமனம் ஆனாலும் அரசாங்கத்திடம்
இருந்து எந்த சம்பளமும் இதுவரை வந்தது இல்லை. இப்போது மின் மயானம்
வந்துவிட்டதால் பிணங்களை அதில் எரித்துவிடுகிறார்கள். ஆகையால் மாதத்திற்கு
ஒருசில பிணங்கள் மட்டுமே புதைப்பதற்கு கொண்டுவருகிறார்கள், இப்படி வரும்
ஒருசில பிணங்களை அடக்கம் செய்தவுடன் அடக்கம் செய்ததற்கு இறந்தவர்களின்
உறவினர்கள் தரும் சிறுதொகை மட்டுமே சம்பளமாக உள்ளதாம். அதை வைத்துக்கொண்டு
எங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்கிறது .
எப்பேர் பட்ட விஷயம்ங்க வாழ்க்கை'யின் அர்த்தங்களை முழுமையாக தினந்தோரும் உணர்பவர் இந்த வெட்டியான் தான். இப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது பெண்கள் தெய்வமாக நினைப்பதுடன் . ~மேலும் வைரமணி பற்றி தினமலரில் வெளியான காணொளி செய்தி இங்க http://www.dinamalar.com/video_inner.asp?news_id=19120&cat=32#.UVMSnr2HlMs.facebook பெண்களை ஒரு போதை பொருளாக, நினைக்கும், அடிமையாக நடத்தும் சிலர் இந்த நாட்டிற்கு அவமான சின்னமாக இருக்கிறார்கள் .