Showing posts with label வைரமணி. Show all posts
Showing posts with label வைரமணி. Show all posts

Tuesday, November 19, 2013

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

பெண்கள் எல்லோருமே அவரவர் தகுதிக்கேற்ப உழைக்கின்றார்கள். ஆண்களை காட்டிலும் பெண்களது சாதனை தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது . அந்த வரிசையில் ஆச்சரியமூட்டும் ஒரு துறையிலும் ஒரு பெண் சாதித்து வருகிறார்.
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. புலியை முறத்தால் விரட்டிய பெண்ணின் வம்சம் கொண்டவளோ... இவள் நடு சாமத்தில் தனி ஒருத்தியாக சிதையை எரியூட்டுகிறாள். கோவையில் சொக்கம் புதூர் மயானத்தில் வெட்டியானாக (வெட்டியாள்) 30வயது வைரமணி என்னும் பெண்மணி.
நான் இவரை சந்தித்த சூழ்நிலை என்னால் மறக்க முடியாத ஒன்று. மிக இக்காட்டான ஒரு சூழ்நிலையில் எனக்கு பெரும் உதவி புரிந்தவர் இந்த வைரமணி. சுட்டாலும் இவரை மறக்காது அப்படி ஒரு உதவி , ஒரு ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்ய வழக்கமாக நல்லடக்கம் செய்துவரும் அமைப்பில் கூட அந்த தினத்தில் எனக்கு உதவ கைவிரித்து விட்டனர் , உதவிக்கு அழைத்த உடன் இருந்த நண்பர்கள் கூட உதவ முன்வரவில்லை, சடலத்தை நடு வீதியில் வைத்துக்கொண்டு அல்லல் பட்ட நிலையில் வைரமணியை அழைக்க "அண்ணா நான் இருக்கேன்... நீங்க கொண்டுவாங்க... நான் செய்து தரேன் பார்த்து கொள்ளலாம்" என்ற வார்த்தை .
அப்போது அவர் கூறிய இந்த வார்த்தைக்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் மிகையாகாது. அந்த உதவிக்கு எந்த அளவுக்கு பணம் கொடுப்பது... அப்படி கொடுத்தால் மட்டும் அதற்கு நிகராகிடுமா ? . எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் நேரில் வந்து உதவுவது இல்லை , ஆனால் அவர் சொன்ன "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தை கடவுளின் குரல் ஒலித்தது போல இருந்தது .
இந்த பெருந்தன்மையான வார்த்தைக்கு தகுந்த பலனை அவர் பெற வேண்டும் . என்று அன்றே என் மனதில் தோன்றியது. என்னுடைய நம்பிக்கையும் அவரது புனிதமான பணியும் உன்னதமானதாக இருந்தால் அவர் சொன்ன வார்த்தைக்கும் உதவிக்கும் இறைவனால் மட்டுமே தகுந்த ஊதியம் கொடுக்க முடியும் .
இவரது துணிச்சல் , இவரது பணியைப்பற்றி என்னுடைய பத்திரிக்கை நண்பர்களிடம் கூறியதில் , இவரைப்பற்றி கோவை முழுவதும் பல நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த பெண்ணின் சிறப்பை அறிமுகப்படுத்தினார்கள் . அதன் மூலம் வைரமணிக்கு அவரது பணியை ஊக்குவிக்கும் அளவில் "நேசம்" என்ற அமைப்பு ஆயிரம் பேர் மத்தியில் கவுரவித்து விருதும் வழங்கியது.
எதுவும் இறைவனது அருள் இல்லாமல் நடந்திடாது , இறைக்கு இணையான பணியை மேற்கொள்ளும்போது இறைவனே இறங்கிவரமாட்டானா என்ன , எல்லாம் அவன் செயல் .
அமெரிக்க பத்திரிகையில் வைரமணி
"அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன இவரது உன்னதத்தை இன்னும் உலக மக்களுக்கும் அறிந்தாகவேண்டும் என்று அமெரிக்காவில் மிகவும் பிரபலமான "தென்றல்" தமிழ் மாத இதழில் இவருடைய பேட்டிக்கு இடம் கிடைத்தது அதுவும் வைரமணியை நான் நேர்க்காணல் செய்து.
நானாக ஒருவரை நேர்க்காணல் செய்து பத்திரிக்கையில் எழுதுவது அதுவும் அமெரிக்க " தென்றல் " மாத இதழில் வெளிவந்தது எனக்கு அந்த பத்திரிக்கை கொடுத்த மரியாதையாகவே எண்ணுகிறேன் . அந்த வாய்ப்பை எனக்களித்த அரவின் சுவாமிநாதன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
"தென்றல்" மாத இதழில் முகப்பு அட்டையில் வைரமணியின் புகைப்படத்துடன் , அமெரிக்காவில் தென்றல் மாத இதழில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அதிலும் முகப்பு அட்டையில் புகைப்படம் கிடைப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமும் அறிய கவுரவம் ஆகும். அதில் வைரமணி செய்தி நவம்பர் 1 ஆம் தேதி பிரசுரத்தில் வெளிவந்துள்ளது.



இந்த சூழ்நிலையில் எனக்கு உதவ அவர் கூறிய "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைகளுக்கான வெகுமதி இறைவன் அவருக்கு கொடுத்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன். எங்கோ ஒரு மூலையில் சொக்கம்புதூரில் மயானத்தில் இருக்கும் வைரமணி இன்று அமெரிக்க மக்கள் முதல் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார் என்று திருப்தியும் எனக்கு ஏற்படுகிறது. இவரை போன்றவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக எல்லோரும் எண்ணும் நிலையில் வைரமணி மிக உயரிய இடத்தை அடைந்து விட்டார். இவரை பற்றி படிக்கும் எல்லோருக்கும் நிச்சயம் பெண்கள் மீதான மதிப்பு மேலும் கூடும், இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை
ஆனால் படித்து பாருங்கள். இவரை போன்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நன்றி
~மகேந்திரன்

Monday, November 04, 2013

"ஒரு பெண் மயான தொழிலாளி அமெரிக்க பத்திரிக்கையில்"

"ஒரு பெண் மயான தொழிலாளி அமெரிக்க பத்திரிக்கையில்"

அமெரிக்க "தென்றல்" மாத இதழில்http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=156&cid=4&aid=8903&m=m&template=n..
கோவை சொக்கம்புதூரை சேர்ந்த ஒரு மயான தொழிலாளி வைரமணி அவருடன் நான் Eeram Magi ஒரு நேர்க்காணல் 01/11/2013 இதழில் வெளியாகி உள்ளது.

நண்பர்களே உங்களது Email ID பதிவு செய்து வைரமணியின் பேட்டியை படியுங்கள் .



நன்றி
http://www.tamilonline.com/thendral/

Saturday, April 06, 2013

மயானத்தில் ஒரு மனுஷி ~நன்றி தினமலர்


  • http://www.dinamalar.com/news_detail.asp?id=683910
    பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது.
    இப்படி சொல்லப்படும் காரணங்களினால்... எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.
    இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.
    ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்) வேலை பார்த்து வருகிறார்.
    இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை சரிவர எரிகிறதா என்று அருகே இருந்த பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார்.
    பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத்துவங்குகிறார்.
    என் அப்பா கருப்பசாமிதான் இந்த வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், எனக்கு எழுதப் படிக்க தெரியாது, ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு, மூணு குழந்தைகள் இருக்காங்க, வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை, இந்த நிலையில் திடீர்னு அப்பா இறந்துட்டாரு, அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துப் பார்க்க யாரும் முன்வரலை, குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகள நல்லா படிக்க வைக்கலாம் அப்படிங்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.
    அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால, எனக்கு எந்த பயமோ, தயக்கமும் இல்லை, இந்த பேய், பிசாசு மேலே துளியும் நம்பிக்கை இல்லை, உண்மைய சொல்லப் போனா இந்த சுடுகாட்டை சிவன் வாசம் செய்யும் கோயிலாத்தான் நான் பார்க்கிறேன்., இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப் போகுது.,
    பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.
    ஒரு பிணத்தை எரிக்கணும்னாலும் சரி, புதைக்கணும்னாலும் சரி ஆறு மணி நேரம் எங்களுக்கு வேலை எடுக்கும். சாயந்திரம் பிணத்தை கொண்டுவர்ரோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க என்று சொல்லி முன்பணம் கொடுத்து செல்பவர்கள், திடீர்னு நள்ளிரவு நேரத்திற்கு பிணத்தை கொண்டு வந்து கொள்ளிவச்சுட்டு போயிடுவாங்க, நான் தனியாள நின்னு எரிச்சு முடிப்பேன்.
    செத்தது கோடீசுவரான இருக்கும், ஆன எனக்கு கொடுக்கவேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க, "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன்'. குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும், மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப்போச்சு.
    பிணத்தை எரிக்கும் போது நூல் கயிறு கூட இருக்காது, ஆனாலும் அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு மண்டைய ஒடைச்சுக்குவாங்க, போகும் போது எதையும் கொண்டு போகமுடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாத்தான் இருக்கும்.
    உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க, இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில் "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம் என்று கூறிய வைரமணியை மூன்று விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
    முதல் விஷயம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எந்த வெட்டியானை எடுத்துப் பார்த்தாலும் குடிப்பழக்கம் இருக்கும், கேட்டால் பிணத்தோடு கிடக்கிறோம் அதுனால குடியை விடமுடியாதுங்க என்பார்கள்"அதற்கும்' தனியாக பணம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்,ஆனால் வைரமணிக்கு அப்படி பழக்கம் எதுவும் கிடையாது,எல்லாம் மனசு தாங்க காரணம் என்கிறார் எளிமையாக., ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
    இரண்டாவதாக, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும் இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை, உழைக்காமல் மற்றவர்கள் பணத்தை உதவியாக பெறுவதிலும் விருப்பமில்லை, ஆகவே என்னைப் பற்றி எழுதுங்க, ஆனா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் யாராவது உதவுங்களேன் என்றெல்லாம் அர்த்தம் வரும்படியா எழுதிராதீங்க என்றவர் இதனாலேயே தனது தொடர்பு எண் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.
    எவ்வளவு இருந்தாலும் இன்னும் யாராவது,ஏதாவது கொடுப்பார்களா என்று ஏங்கித் தவிக்கும் இந்த உலகத்தில் தனக்கு சிரமம் என்ற போதிலும், தனது உழைப்பில் கிடைக்கும் பணம் மட்டுமே போதும் என்ற வைராக்கியத்துடன் வாழும் வைரமணி சந்தேகமே இல்லாமல் ஒரு வித்தியாசமான நம்பிக்கை மனுஷிதான்.

    - எல்.முருகராஜ்

Thursday, March 21, 2013

தன் செயலே தனக்கு உதவி நன்றி வைரமணி

தன் செயலே தனக்குதவி
ஆதரவற்றவர்கள் சாலையோரமாக உடல்நலம் இல்லாமல் சாலையில் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கோ அல்லது காப்பகங்களிலோ சேர்த்துவருகிறோம் .
அப்படி சேர்க்கப்படும் நபர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை நல்லடக்கம் செய்யும் பணி இங்குள்ள ஒரு அமைப்பின் உதவியுடன்நாங்களே அடக்கம் செய்கிறோம் ,இந்த நாள்வரை அப்படித்தான் செய்துவந்தோம் .
இப்படி இருக்க கடந்த சிலநாட்களுக்கு முன்னாள் எங்களால் சாலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த ஒரு பெரியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ,சிகிச்சை பலனின்றி காலமானார் , அவரது பிரேத உடலை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்ய அந்த அமைப்பை அணுகும் போது எப்போதும் அடக்கம் செய்யும் இடத்தில வெட்டியான் இல்லை ஆகையால் நீங்கள் வேறு வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்தார்கள் .
என்ன செய்வது என்று தெரியவில்லை , நாங்களாக மயானத்திற்கு பிரேத உடலை கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய வேண்டுமானால் , குழியை வெட்டுவதற்கே 2000 வரை கேட்கிறார்கள் , கையில் அந்த அளவிற்கு பணம் அப்போது இல்லை மயானம் செல்ல தயாராக பிரேத உடல் மருத்துவ மனை சவக்கிடங்கில் இருந்து வெளியே கொண்டு வந்தாயிற்று ,
தன் நல்ல செயலே தன்னை காக்கும் என்பதற்கேற்ப வைரமணி என்னும் ஒரு 30வயது பெண் வெட்டியானின் தொடர்பு சொக்கம்புதூர் மயானத்தில் கிடைத்தது , ஒரு பெண் மயானத்தில் தன்னந்தனியாக குழியை வெட்டி பிரேதங்கள் வந்தால் தனியாகவே குழிக்குள் இறக்குவதும் , இரவானாலும் பிரேதத்தை எரிப்பதும் தெரியவந்தது, அவரது அனுமதியோடு எனது நண்பன் பழனியப்பன் மூலமாக வைரமணியை, அவரது துணிச்சல் பற்றி பத்திரிக்கையின் மூலமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ,
இந்த இக்கட்டான சூழலில் அந்த வைரமனியின் ஞாபகம் வந்தது நாங்கள் (பிணத்துடன் இருப்பதும் அடக்கம் செய்ய வழிதெரியாமல் இருப்பதும்) உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு எங்களுடைய இக்கட்டான சூழ்நிலையை தெரிவித்தோம் . 
அதற்கு வைரமணி கவலையை விடுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் அந்த நபர் இறப்பிற்கான தகுந்த சான்றிதழை கொண்டுவாருங்கள் அதுபோதும் என்றார் , எங்கள் நெஞ்சில் பால்வார்த்த வைரமணிக்கு நன்றி சொல்லிவிட்டு உடனடியாக பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலமாக சொக்கம்புதூர் மயானத்திற்கு கொண்டு சென்று அந்த முதியவரை வைரமணி வெட்டிவைத்த குழியில் நல்லடக்கம் செய்தோம் . அடக்கம் செய்ததும் பணத்தை நாளை கொடுத்தால் போதும் அதுவும் மிக குறைந்த அளவுமட்டுமே போதும் என்ற ஈர மனது கொண்ட வைரமணி அப்போது எங்கள் கண்ணிற்குகடவுளைப் போல தெரிந்தார் .
அந்த வைரமணிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் இருகை கூப்பி வணங்கினோம் வெட்டியான் வைரமணிக்கு காலில் விழுந்து நன்றி சொல்லி இருந்தாலும் அது மிகை ஆகாது .
எனது வேண்டுகோளுக்கு இணங்க வெட்டியான் வைரமணியை பற்றி நாளிதழில் கட்டுரை எழுதிய எனது நண்பர் திரு . பழனியப்பனுக்கும் .
பிணத்தை கையில் வைத்துக்கொண்டு எங்கு , எப்படி அடக்கம் செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கும் வேளையில்உதவிய வைரமணிக்கும் காலம் முழுவதும் நன்றி செலுத்தக் கடமை பட்டுள்ளோம். இவர்கள் செய்த உதவிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை.
~மகேந்திரன்








Sunday, March 17, 2013

வைரமணி அவள் வீரமணி ~ மகேந்திரன்






பெண்கள் நாட்டின் கண்கள்!, மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,
முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன் கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!
இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன் மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்.
ஆம்!
நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!
நம்மை பெற்றவளும் பெண்தான்!
நம்மை தாங்குவதும் பெண்தான்!
பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?

பெண்கள் சாதிக்காத துறை எதுவும் இல்லை. எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சாதித்து வருகிறார்கள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பல சமயங்களில் பெண்கள் நிருபித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது .
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.

கோவையில் ஒரு மயானத்தில் வெட்டியானாக வைரமணி 30வயது என்னும் பெண்மணி தனது பத்துவயது முதலாக தனது தந்தை கருப்புசாமி பணி புரிந்த வெட்டியான் வேலையை அவரைத்தொடர்ந்து இருவது வருடமாக செய்துக்கொண்டு இருக்கிறார் .
இவருக்கு ரஜி என்னும் கணவரும் கட்டிடத் தொழிலாளி, இரண்டு மகள்களும் , ஒருமகனும் இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கும் வாழ்கையை நடத்துவதற்கும் கணவனின் சம்பாத்தியம் போக வைரமணியின் இந்த வெட்டியான் வேலையும் தான் கைகொடுக்கிறதாம்.

இதுவரை ஆயிரக்கணக்கான பிணங்களை அடக்கம் செய்துள்ளதாகவும் , அதற்கு குழிகளை வெட்டுவது பிணங்களை குழிக்குள் இறக்குவது மட்டும் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு இறந்தவர்களின் சமுதாயப்படி வெட்டியானின் சடங்குகள் என இந்த வைரமணியே பார்த்துக்கொள்கிறார். நேரம் காலம் பார்ப்பது இல்லை இரவு 10, 11 மணி ஆனாலும் தனியொருவராகவே சுடுகாட்டில் குழிகளை வெட்டி பிணங்கள் வந்தால் அதை அடக்கம் செய்வாராம் .

வைரமணி மேலும் கூறும்போது வெட்டியான் பணி நியமனம் ஆனாலும் அரசாங்கத்திடம் இருந்து எந்த சம்பளமும் இதுவரை வந்தது இல்லை. இப்போது மின் மயானம் வந்துவிட்டதால் பிணங்களை அதில் எரித்துவிடுகிறார்கள். ஆகையால் மாதத்திற்கு ஒருசில பிணங்கள் மட்டுமே புதைப்பதற்கு கொண்டுவருகிறார்கள், இப்படி வரும் ஒருசில பிணங்களை அடக்கம் செய்தவுடன் அடக்கம் செய்ததற்கு இறந்தவர்களின் உறவினர்கள் தரும் சிறுதொகை மட்டுமே சம்பளமாக உள்ளதாம். அதை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்கிறது .

எப்பேர் பட்ட விஷயம்ங்க வாழ்க்கை'யின் அர்த்தங்களை முழுமையாக தினந்தோரும் உணர்பவர் இந்த வெட்டியான் தான்.
இப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது பெண்கள் தெய்வமாக நினைப்பதுடன் .

~மேலும்  வைரமணி பற்றி தினமலரில் வெளியான காணொளி செய்தி இங்க http://www.dinamalar.com/video_inner.asp?news_id=19120&cat=32#.UVMSnr2HlMs.facebook
பெண்களை ஒரு போதை பொருளாக, நினைக்கும், அடிமையாக நடத்தும் சிலர் இந்த நாட்டிற்கு அவமான சின்னமாக இருக்கிறார்கள் .


~மகேந்திரன்.