Showing posts with label ஞாபகம். Show all posts
Showing posts with label ஞாபகம். Show all posts

Friday, October 17, 2025

ஒரு வருடம்…ஒரு நினைவு…ஒரு மரியாதை

*மறவாமல் நினைவுகூரும் மரபு* 
“ஒரு வருடம்…ஒரு நினைவு…ஒரு மரியாதை…”

நம்முடைய குடும்பத்தில் ஒரு நபர் இறந்துவிட்டால் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பண்டிகைகள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு மரபு ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கிறது. 

ஆனால் நாளடைவில் அந்த மரபை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும் துயரமும் கலந்த ஒரு நெடிய பயணம்.
அதில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்திற்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்ந்து மறைகின்றனர். 

ஒரு குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால், அந்த வீட்டில் ஒரு வருடம் எந்தப் பண்டிகையும், விழாவும், இனிப்பும், புத்தாடையும் இல்லாமல் அமைதியாக இருப்பது — என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல. அது மறைந்தவர்களுக்கு நாம் செய்யும் ஒரு மரியாதை.
அந்த நினைவு வருடம் என்பது ஒரு துக்க ஆண்டாக அல்லாமல் அவருடைய வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் ஒரு சிறிய அங்கீகாரம். மறைந்தவருக்கான பெருமையின் சின்னம்.

“இந்த வருடம் எங்களுக்குத் தீபாவளி/ கிறிஸ்மஸ் அல்லது ரம்ஜான் இல்லை…” என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அவரவர் குடும்ப வழக்கத்தின் படி ஒரு சிலர் கோவில்களுக்கு அல்லது மலைக் கோவில்களுக்கு செல்ல மாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளை தங்கள் குடும்பத்தில் நடத்தவோ கலந்து கொள்ளவோ மாட்டார்கள். தங்கள் குடும்பத்தில் வழக்கமாக செய்யும் எந்த கொண்டாட்டங்களையும் செய்யாமல் அந்த ஒரு வருடம் துக்கம் அனுஷ்டிப்பார்கள்.

இந்த வருஷம் எங்களுக்கு பண்டிகை இல்லை என்ற
அந்த ஒரு சொல்லில் துன்பம் இருக்கலாம், ஆனால் அதற்குள் நன்றியும் இருக்கிறது.
அந்த வீட்டில் ஒரு விளக்கு ஏற்றப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்களை நினைக்கும் இதயங்களில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும் — இறந்தவர்
அந்த வீட்டைக் கட்டியவராக, அந்தக் குடும்பத்தை நிலைநிறுத்தியவராக, அந்தப் பிள்ளைகளை வளர்த்தவராக சிலர் தங்கள் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்து விடுகிறார்கள்.
சிலர் 80 வயது, சிலர் 100 வயது கடந்தும் குடும்பத்தின் தூணாக நிற்பார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இன்பங்களை ஒத்தி வைத்து, குடும்பத்திற்காக சிலுவைகளை சுமந்தவர்கள்.

அப்படிப்பட்டவர்களின் நினைவுகூர்ந்து ஒரு வருடம் பண்டிகைகளை ஒத்தி வைப்பது என்பது
ஒரு துக்க வெளிப்பாடு அல்ல — அது ஒரு தலைமுறை நன்றி செலுத்தும் வழி.

 ஆண்டாண்டு காலங்கள் அழுது புரண்டாலும் மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை என்பது பழமொழி. குடும்பத்தில் ஒருவர் மறைந்தாலும் யாரும் வருடக் கணக்கில் மூலையில் அமர்ந்து அழுது கொண்டே இருக்க ப்போவதுமில்லை. எவ்வளவு முக்கியமான அன்புக்குரிய நபரை இழந்திருந்தாலும் அடுத்தக் கட்டத்தை நோக்கி வாழ்வு நகர்ந்து தான் ஆக வேண்டும்.

அதே நேரம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மறைந்திருந்தாலும் பிராக்டிக்கலாக இருக்கிறோம். அவர்களது நினைவு எங்கள் மனதில் உள்ளது. நீங்கள் சொல்லும் சடங்கு சம்பிரதாயங்கள் போலித்தனமானவை என்று கூறிக்கொண்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது ஒரு வகையில் இறந்தவருக்கு நாம் செய்யும் அவமரியாதை. 

பண்டிகைகள் ஆண்டுதோறும் வரும்,
ஆனால் ஒருவரின் அன்பும் அர்ப்பணிப்பும் ஒருமுறைதான் —
அவரை நினைத்துப் போற்றுவதற்காக ஒரு வருடம் ஒதுக்குவது (இறந்தவர் குடும்பத்தில் யாராக இருந்தாலும் எந்த வயதில் இறந்திருந்தாலும்)
அவரது வாழ்வின் பெருமையை வெளிப்படுத்தும் சிறந்த வழி.

அந்த நினைவு வருடத்தில் வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு இறந்தவர் படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபட்டு இந்த வருடம் நம் தாத்தா/ பாட்டி இறந்து விட்டார். அதனால் நமக்கு பண்டிகை இல்லை. இந்த குடும்பம் இந்த நிலைக்கு வருவதற்கு அவர் தான் காரணம். அவர் இந்த குடும்பத்திற்காக எவ்வளவோ விஷயங்களை/ தியாகங்களை செய்திருக்கிறார் என்று நினைவுகூறுவது என்பது நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் ஒரு அமைதியான பாடம். 

 *வாழ்க்கைச் சிந்தனை* 

“மனிதன் மறைந்தாலும், அவன் மனிதத்துவம் மறக்கப்படக்கூடாது.”

 “ஒரு வருடம் பண்டிகை தவிர்ப்பது துக்கமல்ல;
அது நன்றி செலுத்தும் ஒரு வடிவம்.”

~ மகேந்திரன்

Thursday, June 15, 2023

ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்

பிரேக் அப்புக்கு ஒரு பார்ட்டி... விவாகரத்துக்கும் கூட போட்டோ ஷுட் என்று இருக்கும் இந்தக் காலத்திலும்... தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு மனதில் குரோதம் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்திலும் அத்திப்பூத்தார் போல் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கைத் துணையை உயிராய் நேசிக்கும் ஒரு சிலரை காண முடிவது ஆறுதலான விஷயம் தான்...


கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்த அவரது மனைவி சரோஜினியின் சமாதியில் தினம் தோறும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி, ஊதுபத்தி சூடம் கொளுத்தி வணங்குவதை பார்த்து ஆச்சரியப்பட்டு அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது மனைவி இறந்த பிறகு மகனுடன் வசித்து வரும் இவர் மனைவி மீது கொண்ட காதலால் மட்டும் இதை செய்யவில்லை என்றும் ..., 
உயிருடன் இருக்கும் போது மனைவி தன் மீது உயிராய் இருந்தார் என்றும் தனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துவிடுவார் என்றும் கூறினார். தனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது மனைவி தன்னை மிகவும் அக்கறையுடன் கவனமாக பார்த்துக் கொண்டதாகவும் கூறினார்.
தன் மனைவி சரோஜினி தன் மீது வைத்திருந்த காதல், பாசம், அக்கறை ஆகியவற்றுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக நாள்தோறும் தவறாமல் தன் மனைவியின் சமாதியை விளக்கேற்றி வணங்குவதாக தெரிவித்தார். தினமும் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட கண்டிப்பாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இங்கு வருவதாகவும் கூறினார்.

இன்னமும் கூட தன் மனைவி தன்னுடனேயே இருப்பதாக உணர்ந்து வாழ்வதாக வார்த்தையிலே அம்புட்டு காதலை வைத்து நெகிழ்ந்து போகிறார் சுப்ரமணி...

வெறுமனே காரையும் சுண்ணாம்பும் பூசிய இந்த சமாதி ஆயிரம் தாஜ்மஹால்களுக்கு சமம் இல்லைங்களா..!!!

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Monday, October 03, 2011

ஞாபகம் விளக்கேற்றும்...

இரவுகளில் மிசாரம் இல்லாமல் போனால் எனக்கென்ன ...
உன்
ஞாபகம் விளக்கேற்றும் பொது..♥


Saturday, September 10, 2011

ஞாபகம்...

நதி
செல்லும் இடமெல்லாம்
பசுமை
பரப்பி செல்லும்...
நீ
செல்லும் இடமெல்லாம்
ஞாபகத்தை

நிரப்பி செல்கிறாய்...♥