Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Thursday, March 25, 2021

இரண்டு இட்லி... சிந்தனை

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு
ஏதோ முனங்கிக் கொண்டே போவான்
இது அன்றாட வழக்கமாயிற்று

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று
கிழவன் என்ன முனங்குகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்

அவன் முனகியது இதுதான்
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்
தினமும் இட்லி வைக்கிறேன் எடுத்துட்டு போறான்;
நீ மவராசி நல்லா இருக்கணும் என்று
கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழவில்லைனாலும்
"இட்லி நல்லா இருக்கு என்று பாராட்டவில்லை என்றாலும்
 ரொம்ப நன்றி தாயே என்று சொல்லக் கூடவாத் தோணல 
ஏதோ,... "செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும் என்று
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி
கொலை வெறியாக மாறியது
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது
கை நடுங்கியது அவன் அப்படி இருந்தாலும் சே...நாம் ஏன் இப்படியாகணும் என்று
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்
இட்லியை எடுத்துக் கொண்டு
வழக்கம்போல
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும் 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது அந்த பெண்மணிக்கு

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள்
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு கையில காசு இல்ல
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்
நல்ல வெய்யில் அகோரப் பசி வேறு
மயங்கி விழுந்துட்டேன்
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னார்

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது
இதைக் கேட்டதும் பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே ஆண்டவா
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உண்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Saturday, March 20, 2021

கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..

*கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..!!* 

பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள்..
 
ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று..

அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.

“ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே..

“ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், ப்ரியாவின் கணவன் அழகர்.

“போன மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே… அன்னிக்கு என்ன கிழமை ?” என்று ப்ரியாவைக் கேட்க,

ப்ரியா, “வெள்ளிக் கிழமை” என்றாள்.

“ஆபரேஷனுக்கு டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த, நம்ம ரமேஷ், அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான். 

‘வெள்ளிக் கிழமையாச்சே’ன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா? இறந்திருப்பாரு. 

வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான். 

பர்ஸ்ல பணம் இருக்கு. 100 ரூபாயக் குடுத்தனுப்பு” என்றபடி, சாமி அறைக்குள் சென்றான் அழகர்.

Thursday, March 18, 2021

ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா? சிந்தனை கதைகள்.



*ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா..??*

ஒரு நிறுவனம், வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது...

அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள். அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது...

இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்..

இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்க்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலலிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார்.

ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின், அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்.

விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள். எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.

அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்...

விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார்.

அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர். வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள் என்றனர்.

(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா?)

அதற்கு அந்த மேலாளர் சொன்னார், எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள் என்றார்..

படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்.

அந்த பத்தாவது கேள்வி இது தான்..!

*10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.? என்பதாகும்.*

இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல. நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?

Yes...!

இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை..!

*பல நிலைகளில் இப்படித்தான் ஏமாறுகிறோம் பொறுமையாளர்கள் கூட புறக்கணிக்கப்படுகிறார்கள்.!!*

Monday, March 15, 2021

மறப்போம் மன்னிப்போம்






டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே மகிழ்ச்சியுடன் இருக்கணும்னு ஆசையா? 

ஆசை மட்டும் இருந்தா பத்தாது.அதுக்கு சில செயல்களை நாம் செய்து தான் ஆகணும். அப்ப தான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். என்ன, அது..?  

முதலில்,உங்களுக்கு யாராவது தெரிந்தோ,
தெரியாமலோ தீங்கு செய்யும் போது, அந்தத் தவறை மன்னித்து, மறந்து விடுங்கள்.

அதை மனதில் தேக்கி வைக்காதீர்கள்.தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். 

நீங்கள் பிறரை மன்னிக்க, மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். 

இதற்கு மருத்துவரீதியாகவும் நல்ல பலன் உண்டு.
”மறப்போம் மன்னிப்போம்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 

இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்ததை உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விடும். 

இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது. 

அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம் .அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.

வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். 

அப்படிக் கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள்.

உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே 
நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள்.

இதனால் மன அமைதி கிடைக்கும். தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும்.

ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும். 

ஆம்.,நண்பர்களே..,

என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா இனிமே நோ டென்ஷன்! 
வாழ்க்கையை ஆனந்தமாய் ஜாம்,ஜாம் என்று கழியுங்கள்.


Saturday, March 30, 2013

நான் கண்ட சிந்தனை ~மகேந்திரன்

"வாழ்க்கை ஒரு முறை ஒரு முறையாவது அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து பாருங்க சில பாவங்கள் கழிவதற்கு அது உதவும்"


"தினசரி நிகழ்வுகளில் நடக்கும் ஒருசில நகைச்சுவைகளை தேடுங்கள் வாழ்க்கையில் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்"
"குறைந்த மன அழுத்தத்தை உங்களால் உணரமுடியும்"


"நீங்கள் குற்றம் செய்யாவிட்டாலும்,
மற்றவர்களின் குற்றங்களை தேடி சுட்டிக்காட்டுவதும் குற்றம்தான்"
 


"துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார்.
இன்பத்தில் இருப்பவன் அழைப்பதற்கும் கொஞ்சம் யோசி"


"நீண்ட நாள் வாழவேண்டும் என்று ஆசைப்படுவதை விட
வாழும் நாளில் நல்லவனாய் வாழ ஆசைப்படலாம்"


"சாதிப்பது சாதனை இல்லைங்க எந்த இடத்தில இருந்து சாதிக்கின்றோம் என்பதுதான் சாதனை" 

"உங்களுக்கு ஓய்வு நேரம் நிறைய இருக்கின்றதா:
அந்த உங்களது ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், மற்றது எல்லாம் இயற்கையாகவே அது பயனுள்ள நேரமாக மாறிவிடும்"
 


"வாழ்கையில் யாரையும் சார்ந்து இருக்காதே என்னெனில்
உன் நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் உன்னுடன் துணைக்கு வரும் "
 

Monday, November 14, 2011

பல்லாங்குழி...

சாலை
குழிகளில் மழை
பல்லாங்குழி ஆடுகிறது...

Saturday, November 12, 2011

நட்பு...

எனக்கு நட்பு
தேவை...
எனக்காக
அல்ல...
சமூதாயத்திர்க்காக...!

"முயற்சி செய்"

உதிர்ந்த சருகுதான்
உரம் ஆகிறது...
தோல்வியில்
உதிர்ந்த நீ
தோல்விகளை
உடைத்தெறிவாய்...
முயற்சி செய்
தோல்விக்கு இன்னொரு சொல்
"முயற்சி செய்"