Showing posts with label ஈரம். Show all posts
Showing posts with label ஈரம். Show all posts

Saturday, April 03, 2021

பந்தமின்றி இருத்தல்







ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன்
அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி
இறங்கி, “இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான்.

அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான்.

அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களதுதவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்.அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.”  என்றான்.

இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென
பயப்படுகிறான்.

ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான்.

இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், “நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில்  இருக்கும் சுகங்களைஅனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியேஅல்ல.” என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை
துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து.
வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம்
வழிகள்…….. அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது
துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது.
தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.

ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல  வேலையாட்களைஅமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்?  அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.

அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது,
துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான்.

ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?

ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.

இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.

நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில்
எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும். என்றான் இளைஞன்.

அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை.

அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள்.என்றார்.

இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார்.

இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார்.

அரசன், “என்னால் எப்படி வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய
மனைவி, என்னுடைய குழந்தைகள்……. ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு
உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?” என்றான்.

இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என
எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடுமரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில்இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார்.

தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி
நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான்.

இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான
தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றிவிட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னைபோகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாகதேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.

ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.

அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும், என்றார்...

Thursday, March 25, 2021

இரண்டு இட்லி... சிந்தனை

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு
ஏதோ முனங்கிக் கொண்டே போவான்
இது அன்றாட வழக்கமாயிற்று

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று
கிழவன் என்ன முனங்குகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்

அவன் முனகியது இதுதான்
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்
தினமும் இட்லி வைக்கிறேன் எடுத்துட்டு போறான்;
நீ மவராசி நல்லா இருக்கணும் என்று
கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழவில்லைனாலும்
"இட்லி நல்லா இருக்கு என்று பாராட்டவில்லை என்றாலும்
 ரொம்ப நன்றி தாயே என்று சொல்லக் கூடவாத் தோணல 
ஏதோ,... "செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும் என்று
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி
கொலை வெறியாக மாறியது
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது
கை நடுங்கியது அவன் அப்படி இருந்தாலும் சே...நாம் ஏன் இப்படியாகணும் என்று
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்
இட்லியை எடுத்துக் கொண்டு
வழக்கம்போல
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும் 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது அந்த பெண்மணிக்கு

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள்
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு கையில காசு இல்ல
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்
நல்ல வெய்யில் அகோரப் பசி வேறு
மயங்கி விழுந்துட்டேன்
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னார்

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது
இதைக் கேட்டதும் பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே ஆண்டவா
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உண்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Tuesday, March 23, 2021

மன சாட்சி... சிறுகதை





ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது. 

ஆனால் குறியீடுகளை பார்த்து குழம்பி போய் இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.

பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் ஐவன் பெர்னான்டஸ் இதை சுதாரித்து கொண்டு எபெலை தொடர்ந்து ஓட சொல்லி சத்தமிட்டார். எபெலுக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் இவர் சொன்னது புரியவில்லை.

இதை புரிந்து கொண்ட ஐவன் பெர்னான்டஸ், முடய்'யை இலக்குக்கு நேராய் உந்தி தள்ளினார்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் ஐவனிடம் கேட்டபோது, 

"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பது தான் என கனவு" என்றார்...

ஏன் அந்த கென்னியரை வெல்ல விட்டீர்கள் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை வெற்றிபெற விடவில்லை, அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். இந்த பந்தயம் அவருடையது" என்றார்....

நீங்கள் வென்றிருக்கலாம் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, 

அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்? 

இந்த பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?

என் தாய் ..எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?

நற்பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

நாம் நம் குழந்தைகளுக்கு எப்படி பட்ட பண்புகளை கற்று கொடுக்கிறோம்?
எந்த அளவுக்கு மற்றவர்களை நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? நம்மில் பலரும் மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறோம். 

சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுவோம். நாம் எல்லாருமே வெற்றிக்கு தகுதி ஆனவர்கள்... 

என்று கூறி முடித்தார்.

 *நீதி:* *மனசாட்சியே இறைவனின் ஆட்சி..* *மனசாட்சியை கொல்லும்போதே/கேட்காமல் சுயநலமாய் செயல்படும்போதே இறைவன் அங்கிருந்து நீங்கிவிடுகிறார்.* *வெறுமனே தெய்வத்தை வணங்குவது மட்டும் பயனில்லை.*

Sunday, March 21, 2021

அம்மா...

இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. 


ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். 

'தம்பி ஆஸ்பத்திரி போகனும்'.

'நான் சாப்பிட்டுட்டு,படுக்கப் போற நேரம்'.

'என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

'நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்' என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி, 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பது போல் வேக வேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி, இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது, அப்பிரசவத் தாயின் அலறல். 

மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

'தம்பி, ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

'வேனம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு, கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்' என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து, ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.

'ஹலோ முதியோர் இல்லமா'?

'ஆமா. என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே'?

'மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லிட்டு, ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை. என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன், அவுங்கள கூட்டிட்டு போக' என்றான்.  

முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல், மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்..!

Saturday, March 20, 2021

கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..

*கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..!!* 

பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள்..
 
ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று..

அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.

“ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே..

“ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், ப்ரியாவின் கணவன் அழகர்.

“போன மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே… அன்னிக்கு என்ன கிழமை ?” என்று ப்ரியாவைக் கேட்க,

ப்ரியா, “வெள்ளிக் கிழமை” என்றாள்.

“ஆபரேஷனுக்கு டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த, நம்ம ரமேஷ், அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான். 

‘வெள்ளிக் கிழமையாச்சே’ன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா? இறந்திருப்பாரு. 

வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான். 

பர்ஸ்ல பணம் இருக்கு. 100 ரூபாயக் குடுத்தனுப்பு” என்றபடி, சாமி அறைக்குள் சென்றான் அழகர்.

Sunday, June 12, 2016

சிங்கார சென்னை..!!!..???



பெயருக்கு ஏற்ற மாதிரியே அதிகரிக்கும் மேம்பாலங்களும், வித விதமான பூங்காக்களும், தெருவுக்கு ஒரு கல்லூரி; வீதிக்கு ஒரு பள்ளி, உலகத் தரம் வாய்ந்த கண் கவரும் ஷாப்பிங் மால்களும், விண்ணை தொடும் கட்டிடங்களும், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட இடங்களும், உலகமே வியக்கும் சினிமா உலகம், உலகத்தின் இரண்டாவது (மெரினா)பெரிய கடற்கரை, பணப் புழக்கம் நிறைந்த பெருநகரத்தில் நிறைந்து வழிகிறது. எலெக்ட்ரிக் ரயில்கள், பறக்கும் ரயில்களுக்கு மத்தியில், இன்னும் விரைவில் தமிழக அரசு அறிவித்துள்ள மோனோ ரயில்களும் சென்னை மாநகரில் வலம்வர இருக்கிறது.



பிரமிக்கவைக்கும் இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஒரு புறம் இருந்தாலும் வந்தோரை எல்லாம் வாழ வைக்கும் தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையில் ஒரு திருஷ்டிப் போல் வசிக்க இருப்பிடம் இன்றி லட்சக்கணக்கான மக்களும் வீதியில் வசிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நொடிக்கு நொடி மாற்றங்கள் கொண்டிருக்கும் சென்னையில் சாலைகளிலும், தெருக்களிலும், நடைபாதைகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் இந்த மாற்றங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. சொல்லப்போனால் இந்த மாற்றங்களால் அந்த மக்கள் மேலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை.

யார் இந்தத் தெருவோரவாசிகள்?
அவர்கள் ஏன் அங்கே வசிக்கிறார்கள்?
அவர்களது தேவைகள் தான் என்ன?
பரபரப்பு நிறைந்த சாலையில், கடந்து செல்லும் பாதையில் நீங்கள் பல முறை சலனமின்றிக் அவர்களை கண்டும் காணாமலும் கடந்து சென்றிருப்பீர்கள். கொஞ்சம் கவனித்து பாருங்கள் பெரும் சாலைச் சந்திப்புகளிலோ, பளபளப்பான மால்களின் அருகிலோ அவர்கள் உங்கள் கண்ணில் பட்டிருக்கும் ஞாபகம் வரும்.
ஆம் அவர்கள் தான் நடைபாதைவாசிகள். நடைபாதைகள் சுருங்கிக்கொண்டிருக்கும் சென்னையில் நடைபாதைகளே வீடுகளாகக் கொண்டிருக்கும் மக்கள்.

இவர்கள் யார் ? ஏன் இங்கெல்லாம் வசிக்கிறார்கள் ?
பலர் இவர்களை பிச்சைக்காரர்கள் என நினைத்ததுண்டு, ஆனால் இவர்கள் பிச்சைக் காரர்கள் அல்ல... தலைமுறை தலைமுறைகளாகத் தெருவோர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அவர்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். பிரம்மாண்டமான சென்னையை உருவாக்கியதில் இவர்கள் பங்கு மிக முக்கியமானது. ஆனால் இவர்களுக்கு இங்கே தங்க இடம் கொடுக்கவில்லை இந்த சென்னை.

ஒவ்வொரு இடங்களிலும் இவர்களது உழைப்பு இல்லாமல் சென்னை பெயர் பெறவில்லை என்பதே உண்மை. தொழிற் சாலைகளில் சுமை ஏற்றி இறக்குதல், கடைகளில் எடுபிடி வேலைகள் செய்தல், வீடுகளில் பாத்திரம் கழுவுதல், சுத்தம் செய்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல் முதலான பல பணிகளை இவர்கள் செய்கிறார்கள். செருப்புத் தைத்தல், சைக்கிள் பழுது பார்த்தல், குடை, பிளாஸ்டிக் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை நீக்குதல், விலை குறைந்த பொருட்களை நடைபாதைகளிலும் ரயில்களிலும் விற்பனை செய்தல், தெருவோர மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் நடத்துதல், ரிக்ஷா ஓட்டுதல், மீன்பாடி வண்டி எனப்படும் பொருட்களை ஏற்றிச்செல்லும் மூன்று சக்கர வாகனம் ஒட்டுதல் போன்ற தொழில்களையும் செய்துவருகிறார்கள். இவர்களில் முக்கால்வாசி பேர் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன் பிழைப்புத் தேடிச் சென்னைக்கு வந்தவர்கள். எல்லோருக்கும் வழி காட்டும் இவர்களுக்கு வசிக்க இடம் தரவில்லை சென்னை.


இவர்களில் சிலரிடம் இவர்களை பற்றி கேட்ட பொழுது :

“இப்டித்தான் நெரிய பேரு வந்து கேட்டுக்கினு போறாங்க, ஆனா எங்களுக்கு ஒரு நல்லதும் நடக்கறதில்ல. ஓட்டு வாங்க வராங்க, வூடு தரேன்னு வாக்குறுதி கொடுக்குற MLA வுக்கு வாக்கை நெறவேத்துறதுக்கு மனசு இல்லை . பொறந்ததுலேர்ந்து தங்கறதுக்கு வூடில்லாம நாங்க இங்கதான் கஷ்டப்பட்டுக்கினு கெடக்கோம். எங்களுக்கு ஒரு வூடு குடுக்க ஒரு அரசாங்கமும் இன்னும் வரலை.”
இவர்களது துயரம் பட்டியல் இட்டால் அது எண்ணிலடங்காதது. உணவு, உறக்கம், கழிப்பிடம், பாதுகாப்பு என மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகள் இவர்களுக்கு துளி அளவு சதவிகிதம் கூட கிடைத்தது இல்லை.


கழிப்பிடம் :
~~~~~

கழிப்பறை கட்ட அரசாங்கமே மானியம் வழங்கி வரும் சூழலில் வீடே இல்லாத இவர்களுக்கு, கழிப்பறைத் தேவைகள் பெரும் சிரமமாகவே இருக்கிறது. நெடுந்தூரம் நடந்து திறந்திருக்கும் மாநகராட்சி கழிப்பிடங்களை தான் பயன்படுத்த முடியும் அங்கும் சுத்தம் சுகாதாரம் எதுவும் இவர்களுக்கு கவலை இல்லை , கழிப்பிடங்களையே குளியலறைகளாகவும் உபயோகிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அங்கு குளிப்பதிலும் அபாயம் உள்ளது, சில காமுகர்கள் தெரியாமல் வருவது போல் வேண்டுமென்று எட்டி பார்ப்பது இங்குள்ள பெண்கள் பெரும் அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றனர். அது மட்டும் இல்லாமல் மாநகராட்சி கழிப்பிடங்களை இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குள் மூடிவிடுவது இவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இரவு நேரங்களில் ஆண்கள் ஒதுக்குப்புறத்தில் சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

இரவு நேரத்தில் சாலையில் உறங்கும் பொழுது பெரும் வீட்டில் வசிக்கும் சில காமுகர்கள் வேண்டுமென்று குடித்து விட்டு பெண்களை உல்லாசத்திற்கு அழைப்பதும், பெண்கள் படுத்திருக்கும் சாலையில் பெண்களுக்கு அருகில் வந்து படுத்துக்கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவது இல்லை .


விபத்துகள் :
~~~~~

பல படங்களில் இந்த காட்சியை நாம் கண்டிருப்போம். சாலையோரம் தூங்கிக்கொண்டிருக்கும் மக்கள் மீது லாரி ஏறுவதுபோல, ஆனால் அதை பற்றியும் சாலையில் படுத்திருப்பவர்களைப் பற்றியும் நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? சென்னையில் இது போன்ற விபத்துகள் பல இடங்களில் அவ்வப்போது நடக்கின்றன. காவல் நிலையங்களில் இதற்கான வழக்குகள் ஏராளமாக தேங்கி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நீதி கிடைப்பதும் இல்லை.


மழைக்காலத்தில் :
~~~~~

மழைக்காலங்களில் இவர்களின் பிரச்சினைகள் சொல்ல முடிவதில்லை . சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மட்டும் அல்ல ஒவ்வொரு வெள்ள காலங்களிலும் பெருமளவிற்கு உயிர்களை பறிக்கொடுக்கின்றனர்.
படுப்பதற்கு இடம் இல்லாமல் ஒவ்வொரு மேம்பாலங்கள் , பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என சென்று இரவு முழுவதும் குழந்தைகளுடன் நின்றபடியே அவதிப்படுகிறார்கள். சிறிய இடம் கிடைத்தால் போதும் குழந்தைகளை ஒன்றின் மேல் ஒன்று படுக்க வைத்து உறங்க செய்வதைப் பார்க்கும் பொழுது வேதனை நெஞ்சை அடைக்கிறது. இதில் ரயில் நிலையங்களில் உள்ள அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் பார்த்தால் அடித்து துரத்திவிடுவார்கள் .


படிப்பு :
~~~~~

பெரும்பாலுமான பெற்றோர்களுக்கு தங்களைப் போன்று பிள்ளைகளும் அவர்களது சந்ததிகளும் கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளதால் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கும் படிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. இதனால் அருகில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து விடுகின்றார்கள்.
ஆனால் ரோட்டில் அமர்ந்து படிப்பதில் பெரும் பிரச்சினைகள் இருக்கிறது. அதையும் தாண்டி பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. வீட்டிற்கே வழி இல்லை ஜாதி சான்றிதழுக்கு எங்கே போக என்று படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்கள். இப்படித்தான் பல மொட்டுக்கள் கல்வி சோலையில் மலர்வதற்கு முன்பே கருகி விடுகின்றன என்பது நிதர்சனம்.

இந்த கட்டுரையில் இவர்களை பற்றி நான் எழுதியது மிக மிகக் குறைவுதான் ஆனால் இவர்களது துயரம் சுதந்திர காலத்திற்கு முன்பிருந்தே இருக்கின்றது என்றால் நீங்கள் கொஞ்சம் உங்கள் மனதோடு சிந்தித்து பாருங்கள்.
இதெல்லாம் இவர்கள் சுதந்திர காலத்தில் இருந்தே அனுபவிக்கற கொடுமை. வீடு கிடைக்கும் நாள் தான் இவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் நாள்.


வழக்கு :
~~~~~

இவர்களுக்கு முழுமையான முகவரி இல்லாததினால் பல முடிக்கப்படாத வழக்குகள் இவர்களின் மீது சுமற்றப்பட்டு சூழ்நிலை கைதிகளாகவும் உள்ளார்கள். ஆனால் இவர்களது குறைக்கேட்க எந்த சீமானும் இதுவரை செவி கொடுத்தது இல்லை. இதனால் அளவற்ற இழப்பு மற்றும் சூழ்நிலை கைதிகளாகி இவர்களே சமூக விரோதிகளாக மாறும் கொடுமையும் ஏற்படுகிறது. உயிர், உடைமை, மானம், கற்பு என எதற்குமே பாதுகாப்பு இல்லாத இந்த அவலநிலையில் வாழும் இந்த மக்கள் நிலை என்று மேன்மை அடையுமோ அன்று தான் அது உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.

இதை விட பெரும் சமூகக் கொடுமை என்னவென்றால் சாலையோரம் வசிக்கும் இவர்களைப் பற்றிய முழு கணக்கெடுப்பு இதுவரை எடுத்து முடிக்கப்படவில்லை. இந்த அப்பாவி மக்களிடம் உடல் உறுப்பு திருடும் அவலமும் நடந்தேறிவருகிறது. இவர்களது குழந்தைகள் ஏராளமானோர் காணாமல் போனது உண்டு, அதைப் பற்றியும் வழக்குகள் பதிவானது இல்லை. நம் நாட்டில் முகவரி உள்ளவர்கள் மட்டும் தான் இந்திய பிரஜை என்ற வகுக்கப்படாத சட்டம் உள்ளது போலும்.


*** இவர்களை பற்றி கூறி இவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்க நாமும் சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் பலரிடம் கூறியதில் .
பலர் கருத்துக்கள் கூறினார்கள் அதில் சில :

* இவர்களை நாம் திருத்தி வீட்டு நடுவில் வைக்க முடியாதுங்க ரோட்டை தேடித்தான் போவார்கள் இவர்கள் இப்படித்தான்.

* இவர்களில் பலருக்கு பாலியல் தொழில் உள்ளது. அதனால் சாலையே இவர்களுக்கு போதிய இடமாக இருக்கிறது.

* இவர்களுக்கு வீடு இருக்குங்க ஆனா அதை வாடகைக்கு கொடுத்து விட்டு ரோட்டுல வந்து உட்கார்ந்துக் கொள்வார்கள்.

* இவர்களில் சிலருக்கு அரசாங்கத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டும் உள்ளது. ஆனால் சென்னையை விட்டு ஒதுக்குப் புறமாக கொடுக்கப்பட்டு இருப்பதால், இவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி தினமும் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் கிடைக்கும் கூலியில் பாதிக்கும் மேல் பயணத்திற்கே செலவாகி விடுகிறது.

* உங்களுக்கு எதுக்கு இந்த வேலை.

* இவங்க ரோட்டில் இருக்கும் போது அவசர எடுபிடி வேலைக்கு ஆட்களை தேடி அலைய வேண்டியது இல்லைங்க.

* பரிதாபமானவர்கள் இவர்களுக்கு ஏதாவது நல்லது நடந்தாக வேண்டும்.

* இவர்கள் சாலையில் இருப்பதால் விபத்துகள் அதிகரிக்கிறது.

* அரசு இவர்கள் மீது அலட்சியம் காட்டி வருகிறது.
இலவசமாக கிடைக்கும் எந்த அரசு சலுகையும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் முழுமையான முகவரி இல்லாததால் அடையாள ஆவணங்கள் பெற முடிவதில்லை.

* இவர்களுக்கென்று போராட யாரும் இதுவரை இல்லை. இவர்களுக்குள்ளாகவே அமைப்புகளை நிறுவி இவர்கள் இவர்களது மேம்பாட்டிற்காக போராடுகிறார்கள்.

ஆனால் தீர்வுகள் தான் இல்லை.

எங்களுடைய இந்த பதிவின் நோக்கம் எல்லாம் இதுதான் "ஒரு தாய் மக்கள்", "ஒன்றே குலம்", "ஒரே ரத்தம்" என்பதெல்லாம் பலருக்கு வார்த்தை வழியிலும், எழுத்து வழியிலும் மட்டுமே உள்ளது.

அரசாங்கம் இவர்களுக்கு என்று தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தொலைநோக்குப் பார்வை கொண்டு இவர்களுக்கு கூடு கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. மீண்டும் இவர்கள் சாலைக்கு குடி வராமல் தடுக்க வேண்டும்.

மக்களுக்காக வாழ்பவர்களே; மக்களோடு வாழ்பவர்களே; இவர்களோடும் ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்..! இவர்கள் துயரம் புரியும்.

பல உயிர்களை பறிகொடுத்தாலும் நம்பிக்கையை பறிகொடுக்காமல் வாழும் இவர்களை ஏமாற்றி வாழும் தரமற்ற குணத்தோடு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ?

~மகேந்திரன் பழனிசாமி

Sunday, April 05, 2015

ஒருவருட முயற்சிக்கு பிறகு மேற்கு வங்க வாலிபரை அவரது உறவினருடன் ஒப்படைப்பு.

கடந்த வருடம் 19/04/2014 அன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவலர் மூலமாக பிரதீப் 23 மனநிலை சரி இல்லாத நிலையில் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.






மனநிலை பாதித்த நிலையில் பிரதீப்
அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை பிரதீப் பிடம் விசாரித்து பல தகவல்கள் சேகரித்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முயற்சியையும் மேற்கொண்டது. https://www.facebook.com/photo.php?fbid=345269842264644&set=pb.100003448945950.-2207520000.1428237057.&type=3&theater சுமார் ஒருவருடமாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்ட பெரும் முயற்சியின் பயனாக பிரதீப்பிற்கு உடல் நலனும் தேறியது . அதோடு அவரது உறவினர் முகவரியும் கண்டுபிடிக்கப்பட்டது மேற்கு வங்காளம் பீர்பாரா ( Birpara ) பக்கத்தில் ராம்தாலா (ராம்ராஜ்தாலா) என்னும் பகுதியில் உள்ள டீ எஸ்டேட் கம்பெனிகளுக்கு பிரதீப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து மெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது . இதனைக் கவனித்த சில கம்பெனிகள் பிரதீப்பின் புகைப்படத்துடன் அந்த ஊர் பகுதியில் உள்ள சுவர்களில் நோட்டிசாக ஒட்டி பிரதீப்பின் உறவை தேடும் முயற்சியில் அவர்களும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையோடு கைக் கோர்த்தனர். அதன் மூலம் பிரதீப்பின் உறவினர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டனர் . உறவினர்கள் கிடைத்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சி அடைந்தாலும் கூட அவர்கள் அதிக வெளியுலக வாழ்க்கை அறியாதவர்கள் . ஆதலால் அவர்களிடம் பிரதீப் பற்றி கூறியதில் அவர்களுக்கு கோவை பற்றியும், இந்த ஊர் எங்கு உள்ளது என்பது பற்றியும் அவர்களுக்கு விளங்கவில்லை . அவர்கள் படிப்பறிவும் போதிய வெளி உலக வாழ்க்கையும் அறியாதவர்கள் போன்று தெரிந்தது . இதனால் பிரதீப்பின் உறவினர்களை கோவைக்கு வரவழைப்பத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்ந்து பிரதீப்பை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தது . இதன் பலனாக கடந்த வாரத்தில் பிரதீப்பின் சகோதரர் மார்டின் என்பவர் தொடர்பில் கிடைத்தார் . அவரிடம் விபரத்தை சொன்னதும் தம்பியை அழைத்து செல்ல உடனடியாக இன்று கோவைக்கு வந்தார் . பிரதீப் அவரை சந்தித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தொலைத்த உறவை கண்முன் கண்டதும் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நம்மையும் கலங்கவைத்துவிட்டது. பிரதீப்பின் சகோதரர் மார்டின் கூறும்போது " கேரளாவில் என்னோடு தான் பிரதீப் வேலைப் பார்த்து வந்தான். கடந்த வருடம் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு சென்றவன் வீடு போய் சேரவில்லை. அலைபேசி வசதி எங்கள் ஊரில் சரிவர இல்லாததால் இவன் காணாமல் போனதும் எனக்கு தெரியாது கடந்த மாதம் நான் விடுமுறைக்கு ஊருக்கு போனபோதுதான் பிரதீப் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. எனது பெற்றோர்களிடம் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பிரதீப் பற்றி அவ்வப்போது பக்கத்து வீட்டினரின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது தெளிவாக என் பெற்றோருக்கு புரியவில்லை . என்னிடத்திலும் தகவல் தெரிவிக்க முடியாத நிலை அதனால் தான் தகவல் தெரிவிக்க வில்லை என்றும் கூறினார்கள் . பிரதீப்பை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலையில் இருந்த போதுதான், கடந்தவாரம் மீண்டும் பக்கத்து வீட்டிற்கு அலைபேசியில் ஈரநெஞ்சம் என்று சொல்லி பிரதீப் பற்றி கூறினார்கள் . அதனாலேயே பிரதீப் இருக்கும் இடம் தெரிந்து உடனடியாக தம்பியை அழைத்து செல்ல வந்தேன் " என்றார்.



குணமடைந்த பிரதீப்

பிரதீப் கூறும் பொழுது " நான் எந்த நிலையில் இங்கு வந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியாது . ஆனால் இங்கு எனக்கு அன்பும் அனுசரணையும் அதிகம் கிடைத்தது . இங்கு உள்ள முதியோர்களை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது இங்கு உள்ள சேவையைக் கண்டு மெய் சிலிர்த்து போனேன். அதனாலேயே இவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லை. என்னை முழுமனிதனாக மாற்றி உறவினர்களுடன் இணைத்து வைக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் மாநகராட்சி காப்பக நிர்வாகிகள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறேன் . இங்கு இருந்ததில் நான் தமிழும் நன்கு கற்றுக் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக அண்ணனுடன் ஊர் செல்கிறேன் " என்று சொல்லிக் கிளம்பினார்.


பிரதீப் அவர்களை அவரது உறவினருடன் சேர்த்துவைக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . ~ஈரநெஞ்சம்

Sunday, March 22, 2015

கால் இழந்த 5 வயது சிறுமிக்கு உதவி ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
(434/ 21-03-2015)
தஞ்சாவூரைச் சேர்ந்த மெஷராஜ் கனி என்ற பெண்ணின் மகள் ஆப்ரின் 5 வயது சிறுமி இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய வலது கால் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு கால் அகற்றப்பட்டது.
கால் இழந்த துக்கம் முடிவதற்குள் அவளின் தந்தை அப்துல் ஹக்கீம் அவர்களை நிராதரவாய் விட்டுவிட்டு எங்கோ தலைமறைவாகி விட . யாரும் ஆதரவற்ற நிலையில் இருந்த அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்பு கொண்டனர். அவர்களின் நிலைமையை கண்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளை அச்சிறுமிக்கு இலவசமாக செயற்கை கால் பொருத்த முன்வந்து.இன்று 21/032015 அச்சிறுமிக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாது சிறுமி வளர வளர செய்கை காலின் அளவு மாறும். அப்படி புதிதாக பொருத்தப்படும் அத்தனை செயற்கை கால்களின் செலவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையே பொறுப்பு ஏற்றுக் கொண்டது எனபதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
~ஈரநெஞ்சம்

Sunday, March 08, 2015

கீதா ராணி இவர் இருநூறு வாயில்லா குழந்தைகளின் தாய்

" எதற்கும் ஒரு எல்லை உண்டு ;
ஆனால் அன்பிற்கு இல்லை எல்லை ".



நம் ஊர்  சாலையில் அன்றாடம் சொறி பிடித்த நாய்களையும், ஊளையிட்டுக்கொண்டுச் சுற்றித் திரியும் நாய்களையும் கடக்காமல் நாம் ஒரு இடத்திற்கு செல்ல முடியவே முடியாது. சில சமயம் பலர் அந்த நாய்களை கல்லெடுத்து அடிப்பதையும் கூட நாம் பார்த்திருப்போம். அப்படிப் பார்க்கும் போது நம்மால் பரிதாபம் மட்டுமே படமுடிகிறது. ப்ளூகிராஸ் அமைப்புகள் என்று நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் என்றாவது நேரில் பார்த்திருப்போமா? அல்லது அந்த அமைப்பின் தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளத்தான் முயன்றிருக்கின்றோமா...?

ஆனால் கோவையின் அருகேயுள்ள  காரமடை அருகே பெரியமத்தம்பாளையத்தில் கீதா ராணி 58  என்னும் பெண்மணி (தனியார் அமைப்பு) சாலையோரம் சுற்றித்திரியும் 200 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவருடைய குழந்தையை போலவே பாவித்து பராமரித்து வருகிறார் . இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களின் சிறப்பு சந்திப்பு பேட்டி உங்கள் பார்வைக்கு.

தாய் தந்தையின் அன்பு காணாது வளர்ந்தவர் தான் கீதா ராணி. திருமண வாழ்விலும் தனது பொறுப்பில்லாத கணவரால் ஏமாற்றங்களுக்கும், பல அவமானங்களுக்கும் உள்ளானவர். எப்படியாவது தனது குழந்தைகளை ஆளாக்கி திருமணம் முடித்தாக வேண்டும் என்ற மிகப்பெரிய கடமையை ஏற்று செவ்வனே நிறைவேற்றிய பின், ' மனிதர்கள் என்றாலே இப்படித்தான் ' என்று வாயில்லா ஜீவன்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்து கடந்த பத்து வருடங்களாக 'ஸ்னேகாலயா' என்ற பிராணிகள் காப்பகத்தை நடத்தி வருகிறார் .

 

இங்கே நேரில் சென்று பார்த்தபோது மனிதர்கள் தான் பலர் ஆதரவை தொலைத்துவிட்டு காப்பகங்களில் அன்புக்கு ஏங்குகிறார்கள் என்று நினைத்தால் .  இங்கு உள்ள எண்ணற்ற வாயில்லா ஜீவன்களும் அதே அன்புக்குத்தான் ஏங்குகின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. 'ஸ்னேகாலயா' நிறுவனர் அன்பின் கடவுளாக திகழும் கீதா ராணி அவர்கள் கூறும் பொழுது, " மனிதர்களைப் போல தாங்க இந்த குழந்தைகளும் முழுக்க முழுக்க அன்புக்கு அடிமையாகி விடுவாங்க. இந்த குழந்தைகளுக்கு நல்லாவே தெரியும்ங்க நல்லவர்கள் யார் உள்ளத்தில் கள்ளம் கொண்டவர்கள் யார் என்று... பாருங்க நீங்க இங்க இருக்கீங்க எல்லா குழந்தைகளும் உங்களை வரவேற்கதான் சத்தம் போடறாங்க யாரும் கடிக்க மாட்டாங்க.

பலரது வீட்டில் இந்த குழந்தைகள் செல்லமாக வளர்ந்தவை தாங்க கொஞ்சம் நோய் வாய்ப்பட்டு விட்டால் எங்களிடம் கொடுத்து விடுவார்கள். அல்லது சாலையில் விட்டுவிடுவார்கள். சாலையில் விட்ட குழந்தைகள் தனது எஜமானை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவர்களைத் தேடிப்போவாங்க ஆனால் அந்த எஜமானர்கள் எப்படியோ எங்களது முகவரியை தேடி இவைகளை அழைத்துப் போகச் சொல்லுவாங்க. நாங்க மறுக்க மாட்டோம் சரி என்று நேரில் சென்று வாயில்லா குழந்தையை அன்போடு அழைத்து வந்து அவைகளுக்கு வைத்தியம் செய்து பராமரிப்போம்.




நான் அழகுக் கலை பயின்றுள்ளேன். என்னுடைய மகளுக்கும் அதை கற்றுக்கொடுத்து ஒரு அழகு நிலையம் வைத்துக் கொடுத்துள்ளேன். அதில் வரும் சம்பாத்தியத்தில் பாதியை இந்த குழந்தைகளுக்காக கொடுத்துவிடுவாள். அவளைப் போலவே, என் மருமகளும் அழகு கலை நிபுணராக இருப்பதால் அழகு நிலையம் வைத்திருக்கிறாள். அவளும் உதவி செய்கிறாள். அது மட்டும் இல்லாமல் எங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் அவ்வப்போது நிதி உதவி கொடுக்கிறார்கள் அதனால் இந்த 200 குழந்தைகளுக்கும் வைத்தியம், உணவு, பராமரிப்பு இடம் எல்லாமே முழுமையாக கிடைக்கிறது. என்னுடைய இலட்சியம் எல்லாம் கோவையில் ப்ளுகிராஸ் இல்லைங்குற குறை இல்லாமல் அதை முழுமையாக நடத்தவேண்டும். வாயில்லா ஜீவன்களை வதைக்காமல் தவிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் " என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது, " கோவையைச் சுற்றி உள்ள எந்த இடத்திலாவது  இப்படி வாயில்லா குழந்தைகள் தவிப்பதை பார்த்தால் 8870207443 என்ற என்னுடைய அலைபேசியில் அழைத்து தகவலை தெரிவித்தால் நாங்கள் எங்களது பணியாளருடன் நேரில் வந்து குழந்தைகளை அழைத்து செல்கிறோம் " என்றார்.



கீதா ராணி அவர்களிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருக்கும் நாய்களை அவர்கள் அன்போடு எங்கள் குழந்தைகள் குழந்தைகள் என்று அழைப்பதை பார்க்கும் பொழுது . அந்த வாயில்லா ஜீவன்களை எந்நாளும் நாய் என்று கூற மனம் வரவில்லைங்க.

இன்று மகளிர் தினம் இப்படிப்பட்ட அன்பின் சொரூபமான பெண்களை நாம் போற்றாமல் இருக்க முடியுமா..?
கீதா ராணி அம்மாவுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!!!
உங்களால் எல்லா பெண்களும் பெருமையடைகிறார்கள்..!

~ மகேந்திரன்




Tuesday, February 24, 2015

கலெக்டர் அலுவலகம் முன் கால் அழுகிய நிலையில்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 410 / 29-01-2015 )
கடந்த 26-01-2015 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து கால்கள் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்த திரு. நாகராஜ் அன்பவர் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
அவருக்கு உடன் இருக்க உறவினர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் அவரது நிலை குறித்த தகவல் அறிந்த தாயார் திடீரென மயக்கம் போட்டு விழுவிட்டார் என்றும் தன மகனை நீங்களே அனுப்பி வைக்க உதவுமாறும் நாகராஜின் தந்தை கேட்டுக் கொண்டார். எனவே ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் மனது கேட்காமல் அவரது தந்தை பாதி வழியிலேயே வந்து உடன் அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு தேனீ மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தார். அவரது உடல்நிலை விரைவில் நல்ல முறையில் தேறி நலம் பெற வேண்டும் என்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
நன்றி
ஈரநெஞ்சம்
Coimbatore, in front of collect office Mr. Nagaraj, who was rescued by Eeranenjam on 26-1-2015 and admitted in Coimbatore Governement. As he has no relation to take care of him, he was unable to proceed treatment.
In this situation Eeranenjam trust informed about him with his family. Suddenly his mother was affected physically and unconscious. So his father requested us to send his son safely. So, Eeranenjam trust arranged an ambulance to take him to his native. Even though his father came in middle of his journey and take care of him. Also his father informed that Mr. Nagaraj was admitted in Theni Government Hospital for treatment. Wwe pray for his health and get well soon.
Thanks
Eeranenjam Trust.





Wednesday, July 16, 2014

“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்


" மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவையில் கொடூரம் ... 
நாடு ரோட்டில் நடந்த “தாலி இழவு”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



இந்த சமுதாயம் எத்தனை முற்போக்காய் மாறிவிட்டாலும் இன்னும் மனதை பாதிக்கும் சில அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பதெல்லாம் இப்போது மிக பழம்பெரும் கதையாகி விட்டது. மிக குறைந்த சதவீதம் தவிர பெரும்பாலான அளவில் வேண்டிய அளவுக்கு பெண்கள் சுதந்திரமாகவும், முன்னேற்றத்துடனும் செயல்பட துவங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இந்த துறை அந்த துறை என்றெந்த பாகுபாடும் இன்றி எல்லா துறைகளிலும் பெண்கள் வெகுவாக சிறப்புற செயல்பட துவங்கி சாதித்தும் வருகின்றனர். ஆனாலும் கூட இது முழுமையான முற்போக்காக எண்ண முடியவில்லை. சில சம்பவங்கள் பார்க்கும்போது பெண்கள் முன்னேற்றத்தின் அத்தனை மகிழ்வும் சற்று பின்னாலே போய் விடுகிறது. இது போன்ற அவலங்களில் இருந்து பெண்களை விடுவித்தால் மட்டுமே அந்த சாதனைகளும் முற்போக்கு என்ற முன்னேற்றமும் அடுத்த அடிக்கான மகிழ்வை முழுமையாக தரும். ஆம்... அப்படி ஒரு நிகழ்வுதான் “தாலி இழவு” என்று சொல்லப்படுகிற ஒரு அவலம்.

கோவையில் :





13.07.2014 அன்று ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. இது காலம் காலமாக நடந்து வருவதுதான் என்றாலும் யாரும் அறியாமல் மறைவாக நிகழும். ஆனால் இன்றோ ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு கோவை, சொக்கம்புதூர் மைதானத்தில் கணவனை (ஆறுமுகம்) புதைக்க வந்த இடத்திலேயே பலர் அறிய நடு சாலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. காண்பவர் மனதை பதைபதைக்க வைத்தது கண்ணீர் பெருக வைத்தது. அந்த பெண் கடந்த பத்து வருடங்களாக கணவர் பிரிந்து சென்றதால் தனியே கூலிவேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். பத்து வருடங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்ற உடன் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்து வந்து, அதுவும் மயானத்திலேயே பலரும் பார்க்க அரங்கேறிய இந்த கொடுமை நாம் சொல்லிக்கொள்கிற முற்போக்கு சமுதாயம் என்ற வார்த்தைக்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியாகும்.

ஒரு பெண் பிறந்தது முதல் அவளின் அன்னை அவளுக்கு பூசி அழகு பார்த்த மஞ்சளையும் , நெற்றியில் வைத்து அழகு பார்த்த பொட்டையும் கணவன் இறந்த பின் அழிப்பது என்ன நியாயம் ? அவளின் தந்தை ஆசை ஆசையாய் அவளுக்கு வாங்கி அணிவித்து அழகு பார்த்த வளையல்களை கணவன் இறந்த காரணத்துக்காக உடைத்தெறிதல் என்பது அநியாயம் அன்றோ ? கணவன் வந்த பிறகு அவள் கழுத்தில் மாங்கல்யம் ஒன்று தானே புதிதாக அணிந்தாள். பிறகு எதற்கு பொட்டையும் ,மஞ்சளையும் அழித்து வளையல்களை உடைத்தெறிய வேண்டும் .

பெண்களின் மனதை காயப்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகிறது. அதில் செய்யப்படுகிற காரியங்கள் புண்பட்ட அந்த பெண்ணின் மனதை மேலும் காயப்படுத்துவதாகவே இருக்கிறது. பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களை சாக்காக சொல்லி அன்றைய காலங்களில் நிகழ்த்திய இது போன்ற அவலம் இனியும் தேவையா ?. அந்த காரணங்கள் கூட சரியானவை இல்லை என்றாலும் இனிமேலும் இது தொடரவேண்டியது அவசியமா ?.

மனிதர்கள் ஏற்படுத்திய எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் நமது சௌகரியங்களுக்காக ஏற்படுத்தியவையே. அந்த காரியங்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். தன் துணையை இழந்து விட்டோம் என்ற நிலையை விட கொடுமையானது இதில் நிகழ்த்தப்படும் அவலங்கள். முழுமையாக அந்த பெண்ணை அலங்கரித்து பூ , பொட்டு, வளையல் போன்ற எல்லாமும் அணிவித்து பின்னர் அதை எல்லாம் அழித்து , உடைத்து , தாலியை அறுத்து, வேதனையில் இருக்கும் அந்த பெண்ணின் மனதை மேலும் குத்தி காயப்படுத்தாதா ? இது போன்ற நிகழ்வுகளை சக மனுசிக்கு நிகழ்த்துவது என்ன நியாயம்? கணவர் இறந்து விட்டால் உடன்கட்டை ஏறுதல், மொட்டை அடித்தல் போன்ற நிகழ்வுகளை வழக்கொழித்தது போல் இந்த அவலத்தை ஒழித்தால் தான் பெண்ணின் முன்னேற்றம் என்பதும் பெண் சுதந்திரம் என்பது முழுமையடையும்.

நன்றி ~