Showing posts with label அமுதா. Show all posts
Showing posts with label அமுதா. Show all posts

Friday, January 12, 2018

இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.

இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~

அமுதா வயது 52 . இரண்டு சகோதரர் சகோதரிகள் இருவர் இவருக்கு. குடும்பத்தில் இரண்டாமவர் இவர். ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட இவர் பிறந்த நாள் முதல் இறந்த நாள் வரையில் வாழ்வில் அனுபவிக்காத துன்பமே இல்லை.





பிறந்து சிறிது காலத்திலேயே ஒரு விபத்தில் தலை நரம்பில் அடிபட்டதால் வாழ் நாள் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த காலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இந்த வியாதிக்கு முழு மருத்துவம் கிடைக்கவில்லை. இந்த வலிப்பு நோயின் காரணமாக பள்ளி படிப்பும் துவக்கத்திலேயே நிறுத்த வேண்டியதாயிற்று.

பள்ளி படிப்பு இல்லை என்றாலும் வீட்டில் இருந்து தனது உடன் பிறந்தவர்களுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளும் செய்து கொடுப்பார். சொந்த தாய்மாமனுக்கு மணம் முடித்து அவர்கள் வாழ்விற்காக பெரும் பொருளுதவியும் அமுதாவின் பெற்றோர்கள் செய்து கொடுத்தனர்..

ஆனால் மூன்று வருடத்திலேயே அவர் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதற்குள் ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்து , அதை எமனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். தன் கணவர் வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டதால் மன அழுத்தம் காரணமாக மனநோய் ஏற்பட்டு தன்னை யார் என்றே தெரியாத நிலைக்கு ஆளானார். .








அதன் பின் அமுதாவின் பெற்றோர்கள் தொடர்ந்து செல்லாத மருத்துவமனை இல்லை , வேண்டாத தெய்வங்கள் இல்லை. அமுதாவின் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.

வாழ்ந்த நாளில் எந்த ஒரு நல்லது கெட்டதிற்கும் சென்றது இல்லை. அக்கம் பக்கம் கூட சென்றது இல்லை. சென்றது எல்லாம் மருத்துவமனை மருத்துவமனை மட்டுமே. 2015 இல் மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டது அதுவரை இவரது நிலையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருத்துவர்களும் முற்றிலும் கைவிட்டு விட்டனர்.

எத்தனையோ விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் இவருக்கு வைத்தியம் பார்க்க தமிழ் நாட்டில் எந்த மருத்துவமும் கிடைக்க வில்லை. வீதியில் விட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு தனது குடும்பத்தை பிரிந்து பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் காப்பகத்திலும் மூன்று வருடம் இருந்தார்.

அமுதாவை சந்திப்பவர்கள் எல்லோரும் பாவப்பட்ட பிறவி , வாழ்வில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிப்பதற்கு இல்லை. எப்போது இறைவன் அழைத்து செல்ல போகிறான் , யார் யாருக்கோ முடிவு வருகிறது ஒரு புரயோஜனமும் இல்லாத இந்த அமுதாவிற்கு எப்போது முடிவு வரும் என்றே புலம்பிக் கொண்டு இருந்தனர்.


இவர்களது பார்வைக்கு அமுதா ஒரு வேண்டாத பொருளாகத்தான் இருந்தார்.

ஆனால் அமுதாவின் மற்றொரு பக்கம் அவர்களுக்கு தெரியாது .

அமுதாவின் நிலையைத் தான் மேம்படுத்த முடியவில்லை ஆனால் அமுதாவை பின்னணியாக கொண்டு அவரை போல மற்றொருவர் இந்த உலகில் பாதிக்க கூடாது என்று அமுதாவின் உடன் பிறந்தவர்களும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை உருவாக்கினர்.

அமுதாவின் வாழ்வு சுகமாக இல்லை என்றாலும் . அவரது பின்னணியில் உருவான இந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலமாக அமுதாவை போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் மறுவாழ்வு பெற்று வாழ்கின்றனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் , தன்னிலை மறந்து குடும்பத்தை இழந்தவர்கள் குணமாகி குடும்பத்துடன் இணைந்து உள்ளார்கள். சாலையில் ஆதரவற்று உயிர் நீத்தவர்களை அவர்களுக்கு உறவாக நின்று நல்லடக்கம் செய்வதும். ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு, கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குவது , மற்றும் ஈரநெஞ்சம் காப்பகத்தில் ஆதரவற்றவர்கள் 150 பேருக்கும் மேல் ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள் . இந்த செயல்கள் அனைத்திற்கும் பின்னணி இந்த அமுதா என்ற தேவதை தான்.

இவ்வளவு பெருமைக்கும் உரிய இந்த தேவதை, கடந்த 3/1/18 அன்று தான் மண்ணுக்கு வந்த இறை பணியை முடித்துக் கொண்டு மீண்டும் இறைவடிவம் பெற்றுக் கொண்டது.

கடவுள் சில நேரம் தேவதைகளை மண்ணிற்கு ஏதோ சில காரணத்திற்காக அனுப்பி வைப்பார் . அவர்கள் மண்ணுலகில் பொழுது போக்கிற்காக வந்து மனிதகுல நன்மைக்காக வாழ்ந்து போவார்கள். அவர்கள் இருக்கும் காலத்தில் பெரும் கூட்டத்திற்கு தலைவராகவோ, அல்லது தான் சொல்லும் அனைத்தையும் மக்கள் வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் போலி சாமியார்களாகவோ இருக்க மாட்டார்கள் . நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம் சித்தர்கள் வாழ்வு பற்றி . பெரும் துன்பம் அனுபவிப்பார்கள் ஆனால் அது எல்லாம் அவர்களது பொழுது போக்காகவே இருக்கும் என்று .

இறைவன் படைப்பில் சிறு துரும்பும் கூட பயனற்றதாக இருப்பது இல்லை..!!!

~மகேந்திரன்

Thursday, May 09, 2013

காயம் ~ கதை

“ரொம்ப வலிக்கிது அம்மா”.

கண்களில் கண்ணீர் மல்கத் தன் காலில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் கூறினாள் அமுதா.
"கொஞ்சம் பொறுத்துக்கோ செல்லம். சீக்கிரம் ஆறிடும்" என்று மகளைத் தேற்றினாள் அம்மா.
அப்போது வீட்டு  வாசலில் வந்து நின்ற நண்பரை வரவேற்றார் அப்பா. உபசரிப்பை ஏற்ற நண்பர்  “வீடு ரொம்ப சுத்தமா இருக்கு. பிள்ளைகளும் ரொம்ப மரியாதையா நடந்துக்குறாங்க. பிள்ளைகளை ரொம்ப நல்லா வளர்த்திருக்கிறீங்க சார்” என்று பாராட்டினார்.
அப்பாவின் கண்களில் பெருமிதம். “ஆமாம் சார்...    என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்சைத் தட்டவே மாட்டாங்க. நான் அவங்களை ரொம்ப ஒழுக்கமா வளர்த்திருக்கேன்” என்று கூறினார்.
தன் வளர்ப்பின் சிறப்பினை மேலும் எடுத்துரைக்க அமுதாவை அழைத்தார் அப்பா. " அமுதா... இங்கே வா" என்று கூப்பிட்டார். அப்பாவின் குரல் கேட்டதும் வேகமாய் அவர் முன் தோன்றினாள் அமுதா. “பாத்தீங்களா சார்... கூப்பிட்ட குரலுக்கு உடனே என் பிள்ளைங்க வந்து நிப்பாங்க” என்று பெருமையாய்க் கூறினார் அப்பா. மேலும் அவளிடம் 'போய்  உன்னோட இங்கிலீஷ் நோட்ட எடுத்துக்கிட்டு வா” என்று கூறினார். அப்பாவின் கட்டளையை கேட்டதும் காற்றாய்ப் பறந்தாள்  அமுதா. உடனே தன் அறைக்கு வேகமாய் சென்று தன் புத்தகங்களை புரட்டி அப்பா கேட்ட ஆங்கில நோட்டு புத்தகத்தை தேடினாள். “இப்போ ஏண்டி இப்படி அவசரப்படுற? பொறுமையா தேடு. ஏன் என் புக்ஸ் எல்லாம் கலைக்கிற?” என்று அக்காவை திட்டினாள் இலக்கியா. அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் மீண்டும்  வேகமாய் சென்று அப்பாவின் முன் நின்றாள் அமுதா.
புத்தகங்களை வாங்கி புரட்டி பார்த்த நண்பர்.. "அடடா... கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கே" என்று அமுதாவை பாராட்டினார். “இருக்காத பின்ன .. என் வளர்ப்பு அப்படி”  என்று நண்பரிடம்  பெருமையாக சொன்னார் அப்பா. சிறிது  நேரம் பேசிவிட்டு நண்பர் விடை பெற்றுக்கொண்டார். அப்பாவும் தன் அறைக்குள் சென்று விட்டார்.
வீட்டில் நிசப்த்தம் நிலவியது. மெதுவாக  மீண்டும் அம்மாவிடம்    வந்தால் அமுதா. "அம்மா... வலிக்கிது மா".. என்று அழுதுகொண்டே கூறினாள். "ஆமாம்.. இப்படி  கூப்பிட்ட உடனே விழுந்து அடிச்சி ஓடினா  அப்படித்தான் வலிக்கும். உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?" என்று திட்டினாள் அமுதாவின் அக்கா கவிதா.


 "இல்ல அக்கா... கூப்பிட்ட உடனே போகலான அப்பா அடிப்பார். என்னால வலி தாங்க முடியாது.
நேற்றைக்கு கால்ல வச்ச சூடு இன்னும் வலிக்கிது... 
 என்னலே தாங்க முடியல. அப்பாவுக்கு கோபம் வந்தா இன்னும் அடிப்பார். அதான் அக்கா வேகமாப்  போனேன்" என்று அழுதுகொண்டே கூறினாள் அமுதா. "இப்படிச் சின்னப் பிள்ளைகளை மிரட்டி, அடிச்சி பயத்தினாலே  
கிடைக்கிற மரியாதையைத்  தான்உன் புருஷன் ஊரெல்லாம்  
பெருமையா நான் நல்லா புள்ள வளர்த்திருக்கேன்னு சொல்லிக்கிட்டு  
திரியிறாரு. ஆண்டவன் என்னைக்கு தான் இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பானோ" என்று மருமகனைக் கடிந்து கொண்டாள் பாட்டி.  
அதைக் கேட்டவுடன் அமுதா " பாட்டி... எங்க அப்பாவைத் திட்டாதே.  
உன்னையா அடிச்சாரு? எனக்கு தானே சூடு வச்சாரு. பேசாம இரு". என்று பாட்டியை அதட்டினாள். "ஆமாம் இதுல  ஒன்னும்   
குறைச்சல்  இல்ல. இப்படியே  நீ  காலம்  முழுக்க  அடி வாங்கிகிட்டே  இரு "  என்று கூறினாள் பாட்டி. 
"பரவாயில்லை  நான் பாத்துக்கறேன்   என் அப்பாவைத் திட்டாதே".  
என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காயத்திற்கு மருந்து தடவினாள்  
அமுதா.  
பக்கத்து அறையில் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் கண்களின்  ஓரம் கண்ணீர்த் துளி கசிந்தது.  
தன் மகளின்  காலில்  தான்  வைத்த  சூடு இதயத்தில்  உரைத்தது  அவருக்கு!

~தமிழ் செல்வி