Showing posts with label பிணம். Show all posts
Showing posts with label பிணம். Show all posts

Saturday, June 24, 2023

இறுதி மரியாதை

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் எத்தனை ஆயிரம் மனக்கோட்டைகளைக் கட்டினாலும் தன்னுடைய மரணம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் இறுதி விருப்பமாக இருக்கும். உலகில் பிறந்து வாழ்ந்து இறக்கும் எல்லா மனிதர்களுக்கும் இறுதி மரியாதையை பெற்றுத் தருவது இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.



உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அந்த உடலை அடக்கமோ தகனமோ செய்யும் வரையிலான இறுதிச் சடங்குகள் செய்யும் நடைமுறை உலகம் முழுவதுமே இருக்கிறது. அந்தந்த பகுதி கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு இவற்றைப் பொறுத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே தான் வேறுபடும். 

உயிருடன் இருக்கும் வரை தான் பணம், பட்டம், பதவி, பேர் புகழ், செல்வாக்கு எல்லாமே. இறந்த பிறகு எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...பிணம்.

என்ன தான் ஒட்டி உறவாடிய சொந்தங்களாக இருந்தாலும் உயிர் போன பிறகு பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தொட்டு தூக்கி எல்லாம் செய்வதற்கு ஒரு வித அச்சமும் தயக்கமும் ஒரு அருவருப்பும் மனத்தடையும் வந்து விடுகிறது.
இறந்த பிறகு அந்த உடலைச் சுத்தப்படுத்தி, சவரம் செய்து, குளிப்பாட்டி அதற்கு அலங்காரங்கள் செய்து, உடை அணிவித்து, மாலை மரியாதையோடு கிடத்துவதற்கு இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்களைத் தவிர யாரும் முன் வருவதில்லை.

ஏனெனில் அதற்கான மனோதிடம் நம்மிடம் இருப்பதில்லை. அதோடு நீண்ட நாட்கள் படுக்கையில் கிடந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், தொற்று நோய்களால் இறந்தவர்கள், விபத்தில் .உருக்குலைந்த உடல்கள், துர்நாற்றம், புண்கள், அதிலிருந்து வடியும் நீர், சீழ் என்று எந்த அருவெருப்பும் பார்க்காமல், ஆண் பெண் பேதமில்லாமல் அந்த உடலைத் தொட்டு தூக்கி அத்தனை சடங்குகளையும் செய்பவர்கள் இவர்கள் தான். 
       
பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், மயான தொழிலாளர்கள், பிணவறை ஊழியர்கள் இவர்களைப் பற்றிக்கூட வரலாற்றின் பக்கங்களில் சில பதிவுசெய்துள்ளன.

ஆனால் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே தேடப்படும் இந்த தொழிலாளர்களைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

ஒருவர் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன் உற்றார் உறவினர்களுக்கு தகவல் சொல்லுவதற்கு முன்பே இவர்களைத் தான் தேடுவார்கள். இறந்தவர்களின் உடல் எந்த நிலையில் இருந்தாலும் சுத்தம் செய்து அலங்கரித்து தேவையான கட்டுகள் இட்டு இறுதி அஞ்சலிக்கு பார்வையாக வைப்பதோடு மட்டும் இவர்களின் பணி முடிவடைந்து விடுவதில்லை. 

தேங்காய் உடைத்தல், எண்ணெய் சீயக்காய் வைத்தல், தண்ணீர் கொண்டு வருதல் குளிப்பாட்டுதல், கோடி போடுதல் நெய்ப் பந்தம் பிடித்தல், பாடை மாற்றுதல், கொள்ளி வைத்தல் அல்லது குழிக்குள் இறக்குதல் என்று அனைத்து விஷயங்களையும் முன் நின்று செய்வது இவர்கள்தான்..
இன்றைய நாகரிக உலகில் நம்முடைய பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
என்னதான் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் நன்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் கூட தன்னுடைய குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழும் போது நமக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.. அப்போது நமது குடும்பத்தில் நீத்தாருக்கு எந்தக் குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் நம்முடைய ஸ்தானத்திலிருந்து எடுத்துக்கட்டி செய்பவர்கள் அவர்கள்தான்.

அடக்கத்திற்கு பிறகும் கூட பால் தெளித்தல், எரித்த இடத்தில் அஸ்தி எடுப்பது முதல் ஈமச்சடங்கு மற்றும் பதினாறாம் நாள் காரியங்கள் செய்வது வரை எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்கு உண்டு.

நமது சமூகக் கட்டமைப்பில் துப்புரவு தொழில், சவரத்தொழில், சலவைத்தொழில், மருத்துவ தொழில் இவற்றில் ஈடுபட்ட சமூகத்தினர் யாரும் செய்ய முன்வராத போது தாமாக முன்வந்து இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை செய்து வந்தனர். அவர்கள் வழியில் வந்த வாரிசுகள் விரும்பியோ விரும்பாமலோ இந்த தொழிலை செய்யப் பணிக்கப் பட்டார்கள்.

என்ன தான் இவர்கள் செய்வது உன்னதமான பணியாக இருந்தாலும் சமூகம் இவர்களை தீட்டாகத் தான் ஒதுக்கி வைத்திருக்கிறது. இவர்களுக்கு கிடைக்கும் கூலியும் சொற்பமானதாகவே இருக்கிறது. 

துக்க வீட்டில் மற்றவர்கள் இழிவாக கருதக்கூடிய சடங்குகளை செய்பவர்கள் என்பதால் மற்ற சுப காரியங்கள் கோவில் விசேஷங்களில் இவர்களை தீட்டாகவே இந்த சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இதுபோன்ற தொழிலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு பெண் கொடுப்பதற்கு கூட தயங்கும் நிலை தான் இருக்கிறது.. இறப்பு இல்லாத நாட்களில் வேறு வேலைகளுக்கு சென்று பிழைப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை இவர்கள் சந்திக்கின்றனர்.

எனினும் இறுதிச் சடங்குகளை செய்யும் தொழிலாளர்கள் இன்றைக்கும் சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

அடக்கம் முடிந்தவுடன்
இவர்களை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு கொடுக்கும் சொற்பக்கூலிக்கும் பேரம் பேசுவது தான்.

நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மரியாதை இருந்திருந்தாலும் இறந்த பிறகு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வது சில நூறு ரூபாய் கூலிக்கு போராடும் இந்த இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.

எத்தனையோ பேர் தன் மரணத்திற்கும் பிறகும் கூட யோசித்து ஈமச்சடங்கு , காரியம் செய்யவும் கல்லறையோ, சமாதியோ கட்டுவதற்கும் கூட முன் கூட்டியே பணம் எடுத்து வைக்கிறார்கள். 
இனி அவ்வாறு செய்யும்போது நமக்கான இறுதி மரியாதையைப் பெற்றுத் தரும் ஈமச்சடங்கு தொழிலாளர்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருவன் தன் வாழ்நாளில் எத்தனை கோடி சொத்துக்களை சேர்த்து வைத்து எல்லோருக்கும் வாரி வழங்கியிருந்தாலும், எத்தனையோ தான தர்மங்கள், புண்ணியங்கள் செய்திருந்தாலும் அத்துணைப் புண்ணியத்திற்கான மரியாதையும் இறுதிச் சடங்குகளை
செய்யும் இந்த எளிய தொழிலாளர்களுக்கு தான் செல்கிறது.

ஆனாலும் நம் சமூக அமைப்பில் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம் இவர்களுக்கென்று ஏதாவது சலுகைகள் வழங்குகிறதா என்று தெரியவில்லை... அப்படி இல்லாதிருந்தால் இவர்களும் வாக்களிக்கும் குடிமகன் தான் என்பதை கருத்தில் கொண்டு இவர்களுக்கான சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.
நாமும் சகமனிதனாக
இவர்களையும் மனிதர்களாக மதிக்க பழகுவோம்..!

~ஈரநெஞ்சம்

Sunday, September 14, 2014

மழையால் ஒதுங்கிய கவிதை... மகி




வீட்டைச் சுற்றிலும் தண்ணீர்
இவர்கள் தொண்டைக் குழி மட்டிலும்
பாலைவனம்...

வாண்டுகள் வலை போட்டுத்தேடுகின்றனர்
மீன் தொட்டியையும், தொட்டிக்குள் இருந்த
மீனையும்...

குட்டிகளுக்கு விளையாட வீட்டுக்குள்ளேயே ஆறு
இறங்கி விளையாட கரை எங்கே...

மீனவர்கள் வீட்டை தேடியே
ஆறும் மீனும்...

படித்தது போதும் கொஞ்சநாள்
மழை பாடம் படிக்க,
வேடிக்கை பார்க்க, படிப்பு வாசம் படாத
தாத்தா பாட்டியெல்லாம் குடும்பத்துடன்
பேரன் படிக்கும் பள்ளி மாடியில்...

அண்ணாந்து நட்சத்திரம் ரசிக்கும்
கவிஞன் இன்று
ஹெலிகாப்டர் உணவுக்காக
அண்ணாந்து பார்க்கிறான்...

இந்துமா சமுத்திர கடலைவிட
காஷ்மீர்க்கு மழை கொடுத்த
வெள்ளம் பெரியது,

தென்னகத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் போல
இங்கே மழை நீரை குடிநீராக மாற்ற முடியுமா...

கழிவு நீர் கலந்த மழை நீர் வீட்டுக்குள்ளேயே
முட்டிக்கு மேல் நிற்க
எங்கு சிறுநீர் கழித்தால் என்ன டா குரல்...

கட்டி இருக்கும் உடை முதல் கொண்டு மழை
துவைத்துக் கொடுத்துவிட்டது
காயப்போட மின்னல் கொடி மட்டும் தான் மிச்சம்...

ஆங்காங்கே வைக்கோல் கன்றை மட்டும் விட்டு வைத்துவிட்டு
பசுவெல்லாம் மழை கொன்றது...

நீரில் சமாதியான கர்ப்பிணி வயிற்றில் மட்டும் தண்ணீர் இல்லை,
அவளை சுற்றிலும் தண்ணீர்...

சுடுகாடு தேடி மிதந்துவரும் பிணங்கள்
மனிதனுக்காக குழி வெட்டும் இடமெல்லாம்
மழை நீர் ஆக்கிரமிப்பு
மழை கொன்ற மனித உடலை புதைக்க
வெட்டியானும் இல்லை வெட்ட இடமும் இல்லை...

மழை போதாது என்று
தண்ணீரில் தெரியும் மேகத்தை பார்த்து
கண்களிலும் கண்ணீரின் மழை...

மூழ்கிக்கிடக்கும் தண்ணீர் லாரிகள்...
நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குடங்கள்

மார்வாடி மழையால் மரித்துப் போனது அறியாது மார்வாடிக்
கடைக்கு மிதந்துவரும் பித்தளைக் குடங்கள்...

தபால் பெட்டிக்குள் தண்ணீர்
பட்டுவாடா நடப்பது எப்போது...
யாரோ எழுதிய கடிதம்
யாருக்கோ கொண்டு சேர்க்கும் மழை...

ஏற்கனவே கடனில் மூழ்கிப்போன வீடுகள்
இன்று மீண்டும் வெள்ளத்தில் மூழ்குகிறது...

கூடு கட்டின மரம் இருந்த இடம்
தெரியாமல் பறவைகள்
அல்லல்...

இதுதான் விதி என்பதா
தாமரை பூவிற்கு தண்ணீரிலேயே மரணம்..

பூந்தோட்டம் இருந்த இடம் காணோம்
பட்டாம் பூச்சிகள் கண்ணிலும் மழை...

நெல்வயலுக்குள் புகுந்ததால்
ஜோசியக் கிளி கூட
அவர்களோடு பட்டினிதான்...

மனிதன் பொதுக் கூட்டத்திற்கு தேதிக் குறிப்பிட்ட
அதே தேதியில் மழை வெள்ளம் நடத்தும்
இரங்கல் கூட்டம்...

கொஞ்சம் அதிகம் வேண்டிவிட்டார்கள் போல
கொட்டுகிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது
கோவிலுக்குள் இருக்கும் கடவுளுக்கும்
ஒதுங்க இடம் கிடைக்காமல் தவிக்கிறது...

மழைக் காட்சியை படம் பிடிக்க வைத்திருந்த கேமராக்களையும்
நீர் ஒப்பனை செய்ய , மின்னல் வந்து படம் பிடிக்கிறது...

தேர்தல் சமயத்தில் குடைசின்னம் கொண்ட கட்சிகளுக்கு
எதிர்க் கட்சிக்காரனே செய்யும் ஓசி பிரச்சாரம்...

ஒரு உண்மை உறுதியானது
" தண்ணீர் பந்தலுக்குள்ளும் தண்ணீர்...

மழைநீர் சேகரிப்புத் திட்டம்
உடைத்தெறிந்தது இந்த மழை வெள்ளம்...

என்ன தேவையோ தெரியவில்லை
சாலை மறியல் செய்யும் மழை...

மழை என்னும் ஒரே ஒரு திருடன் ஒரே நேரத்தில்
அனைத்து வீடுகளுக்குள்ளும் புகுந்து
உயிர் முதல் அனைத்தையும் களவாடி விட்டான்
தண்டிக்க ராணுவத்தால் கூட முடியாது...

மழை மிச்சம் வைத்த உயிர்களை
நிவாரண நெரிசல் சவ வேட்டையாடுகிறது...


~ மகி

Sunday, November 24, 2013

பிணவறை உழைப்பாளிகள்




"இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்" ~ குறள் 1035

"தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

இந்த குறளுக்கு ஏற்ப தொழில் செய்து வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர். கைத்தொழில் செய்பவர், சிறு தொழில் முனைவோர், சொந்த தொழில் நடத்துவோர் என்று ஏராளமானோர் , எல்லாம் நாம் நினைத்ததுபோல அமைவது இல்லை , தமக்கு வாய்த்த விதிப்படி தொழிலை அமைத்துக்கொண்டு செய்யும் தொழிலை தெய்வமாக வணங்கி வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் செய்யும் வேலையை பொறுத்தும் அதில் வரும் வருவாயைப் பொறுத்துமே இந்த சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அழகான உடைகள் அணிந்து கொண்டு, காரில் மிடுக்காய் வேலைக்கு செல்பருக்கு ஒரு விதமான மரியாதை என்றால், சாலை ஓரம் இருக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளிக்கு அந்த தொழிலுக்கு ஏற்ற மரியாதை தான் கிடைக்கிறது.

" பிணவறை பணியாளர்கள் " இவர்களைப் பற்றி நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை .

நமக்கென தருணம் வரும் வரை இப்படி சற்றும் நம் கவனத்திற்கு வராதவர்கள் தான் இந்த பிணவறையில் வேலை செய்யும் பணியாளர்கள். தமது உறவினர் இறந்தாலே அந்த உடலை பார்ப்பதற்கு பலருக்கு பயம், இறப்பு செய்தி கேட்டாலோ அல்லது இறந்த வீட்டுக்கு சென்றாலோ அங்கு இறந்தவர்களின் உடலை தொடவோ அல்லது பார்ப்பதற்க்கோ கூட சிலர் அச்சப்படும் நிலையும் இருக்கிறது. இப்படி இருக்க சடலங்களை குவித்து வைத்திருக்கும் கிடங்கு என்றால் எப்படி இருக்கும், அந்த கிடங்கில் சடலங்களை கையாளும் உழைப்பாளி மனிதர்களை பற்றியதுதான் இந்த கட்டுரை.

அந்த உழைப்பாளிகள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்.

பிணவறை வேலை செய்பவர்கள் என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும் என்ன ? பத்து மாதம் கருவில் சுமந்த தாயாயினும் என்ன ?உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை , இந்த உழைப்பாளிகள் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து
போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி அழுகிய உடலானாலும் அந்த உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது இவர்களே வரவேண்டும். மருத்துவர்கள் பார்வை சோதனை மட்டுமே நடத்துவார்கள் . அது முடித்த பிறகு மீண்டும் அந்த உடலை கோரமாக இல்லாமல் நல்ல முறையில் சீர்படுத்தி உறவினர்கள் கையில் ஒப்படைக்கிறார்கள்.

பொதுவாக சடலங்களை குளிரூட்டப்பட்ட அறை அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து பராமரிப்பார்கள் . தற்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டால் , சடலங்கள் விரைவில் அழுகி புழுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. அவற்றை சுத்தப்படுத்துதல் மிகவும் கடினம் அவற்றை
கையாளுவதில் கொஞ்சமும் அருவருப்பு பயம் இல்லாமல் அவர்கள் கையாள்வதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சகிப்புத் தன்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் கைகளுக்கு கவசம் அணியும் இவர்களைல் சிலர் சுவாசக் கவசம் அணிவதில்லை. இந்த வாடை பழகிப் போனதே அதற்குக் காரணம் . நாற்றத்தை சமாளிக்க மது அருந்த காரணம் தேடும் துப்புரவு தொழிலாளிகள் மத்தியில் இப்படி பிணங்களை தூய்மைபடுத்தும் சிலர் மதுவை தொடாதவர்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

பொதுவாக எட்டாம் வகுப்பு வரை தான் இவர்கள் படித்திருக்கிறார்கள். வேலைக்கு சேரும் போது இவர்கள் மருத்துவ வளாகங்களை சுத்தபடுத்தும் துப்புரவு பணியாளர்களாகவே சேர்க்கப்படுகின்றனர். பின்னர் சடலங்களை கையாள்வது , அப்புறப்படுத்துவது போன்றவையும் மருத்துவ துறையில் துப்புரவு பணிகளில் ஒன்றே என்பதை புரிந்து கொண்டு அதைச் செய்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. காரணம் வருமானத்திற்கு வேறுவழி இல்லை என்கிறார்கள் அதுவும் இல்லாமல் இந்த பணியிலும் ஒரு ஆத்மார்த்தத்தைக் காண்கிறார்கள். புதிய தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் இந்த வேலை கொஞ்சம் பயமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதுவே பழகி கொள்கிறார்கள். தினமும் சடலங்களுடன் இருப்பதால் பேய் பிசாசு, மரணம், பற்றிய பயம் இவர்களுக்கு அறவே இல்லை.

துப்புரவுத் பணியாளர்கள் என்று வெளியே சொல்லிகொண்டாலும் மருத்துவமனையில் இப்படி சடலங்களை கையாளும் வேலையை தாங்கள் செய்வதாக ஒரு நாளும் வெளியில் சொல்லுவதில்லை. தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூட இவர்கள் தாங்கள் செய்யும் வேலையை பற்றி சொன்னதில்லை. ஏனென்றால் சடலங்களை சடலங்களை கையாளுகிறார்கள் என்று தெரிந்தால் மனைவி மக்கள் பக்கத்தில் வரக் கூட யோசிப்பார்கள் என்ற காரணமே. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் கூட இவர்கள் செய்யும் தொழில் பற்றி தெரிந்தால் உடனே பேசுவதை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தால் இவர்கள் தங்களை பிணவறை பணியாளராக சொல்லிக்கொள்வது இல்லை . அப்படி இவர்களைப் பற்றி தெரிந்த சிலர்கள் சடலங்களுடன் பழகும் ஒரு கொடுரமான மனிதனாகவே இவர்களை சித்தரிக்கிறார்கள் . இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் வேலை செய்யும் இவர்களை எப்படி பாராட்டுவது என்று நாம் வியந்து பாராட்டினாலும் இவர்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

தற்கொலை செய்துகொண்டவர்கள் , குழந்தைகள், விபத்தில் உயிர் இழந்த சடலங்களை இவற்றைப் பார்க்கும் போது மனம் வருத்தப்படும் இவர்கள் வயதானவர்களின் சடலங்கள் வந்தால் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார்கள் . ஆதரவற்றோர் அடையாளம் தெரியாத சடலங்கள் காவல்துறை விசாரணை முடியும் வரை கிடங்கிலேயே மாதக்கணக்கில் இருக்கும் அப்படிப்பட்ட சடலங்களை தினமும் பார்த்து "உனக்கென்று முழு விடுதலை எப்போது வரும் என்ற ஏக்கமும் வேண்டுதலும் இருக்கிறது இவர்களுக்கு" அப்படிப்பட்ட சடலங்களைக் கையாளும்போது இவர்கள் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறார்கள். வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும் இவர்கள் யாரிடமும் வற்புறுத்திப்
பணம் கேட்பதில்லை. விருப்பப்பட்டுக் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறார்கள். ஆதரவற்ற சடலங்கள் வரும்போதும் அதை நல்லடக்கம் செய்யும் சமூக அமைப்புகளுடன் இணைந்து அந்த உடலின் ஆத்மாக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். சடலங்களுடனும் ரத்தங்களுடனும் வாழ்ந்து பழகியதால் இவர்கள் அந்த சடலங்கள் இருக்கும் இடத்தில் தான் உணவும் உண்கிறார்கள் . தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லையா என்ற சந்தேகத்தைத் தீர்க்க அவர்கள் கூறும்போது, இறந்த உடலை அன்றே கையாள்வதுதான் ஆபத்து , ஒருவர் இறந்து குறைந்தது மூன்று நாட்களுக்குள் அந்த உடலில் இருக்கும் தோற்று நோய்க் கிருமிகளும் இறந்து விடும் புதிய கிருமிகள் தோன்ற மேலும் சிலநாள் ஆகும் அதற்குள் அந்த உடலை கையாண்டுவிடலாம் என்கிறார்கள்.

உழைப்பே தெய்வமாக வணங்கி இந்த பணியை மேற்கொள்ளும் இவர்கள் சடலத்தை கையாள்வதற்கு முன் இறந்தவரின் கால்களை
தொட்டுக் கும்பிட்ட பின்னரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். இவர்கள் தொடும் ஒவ்வொரு உடலின் ஆத்மாக்களும் அவர்களது உறவினர்களை ஆசிர்வதிக்கிறதோ இல்லையோ இவர்களை நிச்சயம் ஆசிர்வதிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட "பிணவறை பணியாளர்கள் " இல்லை என்றால் நாம் கட்டி அணைத்து அழ நமக்கு நம் சொந்தங்களின் உடல் முழுமையாக கிடைக்காது . அனால் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் எப்போது வேலை போகும் என்று அச்சத்துடன் வாழும் இவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானது தான். எத்தனையோ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் நாம், இறந்தபின் நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர எண்ண வேணாமா..?

~மகேந்திரன்

"மயான தொளிலாளியையும் அவர்களின் ஆத்மார்த்தமான பணிகளைப்பற்றியும் எழுதிய நான்
"பிணவறை பணியாளர்கள்' அவர்களோடும் அவர்களுடைய உணர்வுகளையும் உடன் இருந்து
அறிந்து எழுதியது இந்த கட்டுரை.

அவர்களைக்கண்ட பிறகு ஒன்று மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

"முற்றுப்புள்ளிக்கு முகவரிதரும்
இந்த
மனிதர்களைப் பற்றி அறிந்தால்
தொடர் புள்ளிக்கு பின்னால்
போடும் ஆட்டங்கள்
சீர்ப்படுதப்படும் "