*உடல் உறுப்பு தானமும்? மரியாதையும்?*
இந்தியாவிலேயே தமிழகம் தான் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
இதுவரை 1817 நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு 10827 உடல் உறுப்பு தானங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
தமிழக மக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது.
எதிர்பாராத விதமாக விபத்துகளில் மூளை சாவு அடைந்தவர்கள் இனி பழைய நிலைக்கு திரும்பவோ உயிர் பிழைக்கவோ வாய்ப்பில்லை என மருத்துவர் குழு அறிவித்த பிறகு குடும்பத்தினரின் சம்மதத்துடன் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக
பெறப்படுகிறது.
உடலில் உயிர் இருக்கும் போதே குடும்பத்தினர் சம்மதத்துடன் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், கண் உள்ளிட்ட உடல் பாகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதன் பிறகு முறையாக பிரேத பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட நபரின் உடலானது அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஒருவரது உடல் உறுப்புகள் 20 நபர்களை வாழ வைக்கும்.
இத்தகைய நேர்வில்
விபத்தில் அடிபட்டவர் சுயநினைவே இல்லாமல் இருக்கிறார் என்பதால் அவரது சம்மதம் இங்கே கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.
மேலும் அவர் பிழைப்பதற்கோ பழைய நிலைக்கு வருவதற்கோ 0.1% வாய்ப்பு இருந்தால் கூட அதைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
ஒருவேளை அவர் கோமா நிலையில் இருந்தால் கூட செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உதவிகளோடு அவர் உயிரோடு இருந்தால் போதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல முடியாத அடித்தட்டு மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலைகளில் மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் அவர் உயிருடன் இருக்கும் போதே அகற்றப்படுவது ஒரு வகையில் கருணைக் கொலை தான்.
அவரைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடல் உறுப்புகளாவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதிக்கின்றனர்.
உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்களில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களே அதிக அளவில் இருக்கிறார்கள்.
உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் என்று குறிப்பிட்ட தொகை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் அவர்களின் குடும்பசூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சில லட்சங்கள் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இறக்கும் போதும் எத்தனையோ பேரின் வாழ்வுக்கு வழிகாட்டிப் போகும் இந்த மரணங்களுக்கு வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையானது மிகவும் குறைவாகவே இருக்கிறது.
வெடி விபத்து, கலவரம் போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது 5 லட்சம் வரையிலும் இயற்கை சீற்றங்களினால் இறக்கும் போது ரூபாய் 4 லட்சம், இவ்வளவு ஏன் கள்ளச்சாராயம் மரணங்களின் போது கூட ரூபாய் 10 லட்சம் என்று நிதி உதவி வழங்கப்படும் போது உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவே.
தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை தேவைப்படும் நபர்களுக்கு பொருத்த மேற்கொள்ளப்படும் மருத்துவ அறுவை சிகிச்சை செலவுகளே
இந்த இழப்பீட்டுத் தொகையை விட பல மடங்கு அதிகம்.
இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வழங்கக்கூடிய தொகையை நிவாரணத் தொகை என்றோ உதவி என்றோ சொல்லக்கூடாது.
ஒரு நாட்டின் ராணுவ வீரன் எப்படி தன்னையே நாட்டுக்காக அர்ப்பணிக்கிறானோஅது போன்ற ஒரு வீர மரணத்தை கௌரவப்படுத்தும் விதமாக இதைக் கௌரவ தொகை என்று அறிவித்து கௌரவமான ஒரு தொகையை கொடுத்து அவர்களின் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு அரசு உதவ வேண்டும்.
இதன் மூலம் இன்னும் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
மூளைச் சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கும் நபர்களின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மூளைச் சாவடைந்த நபரின் குடும்பத்தினர் அந்தக் கடினமான சூழ்நிலையிலும் தங்களது நெருங்கிய உறவுகளின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாகக் கொடுக்க முன் வருபவர்களுக்கு அந்த முடிவை கெளரவப்படுத்தும் விதமாக அரசு மரியாதை செய்வது ஒரு நல்ல தொடக்கம்.
ஆரம்பக் கட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களே நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நடைமுறை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக அவருக்கு அடுத்தடுத்த படிநிலையில் இருக்கும் அலுவலர்களை அனுப்ப ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்தவருக்கு கிடைக்கக்கூடிய அரசு மரியாதை தொய்வடைந்து விடும்.
ஒரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அனைவருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதே உண்மையான அரசு மரியாதையாக இருக்கும்.
அந்த நபரின் உயிர் தியாகத்துக்கும் அந்த குடும்பத்தின் தியாகத்துக்கும் அப்போதுதான் உரிய மரியாதை கிடைக்கும்.
முன்பெல்லாம் உடல் உறுப்பு தானம் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் காணொளியாக வந்தது போய் இப்போதெல்லாம் சிறிய பெட்டிச் செய்தியாக மாறி வருகிறது.
தங்கள் குடும்பத்திற்கு அச்சாணியாக விளங்கிய முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அகால மரணம் அடைந்த போதும் சேவை உள்ளத்தோடு உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வரும் குடும்பத்திற்கு முறையான கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
~ஈரநெஞ்சம்
Tweet | ||||
No comments:
Post a Comment