Sunday, February 18, 2024

உடல் தானம்


உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், உடல் உறுப்பு தானம், உடல் தானம் பெறுவதில் தமிழக சுகாதாரத் துறையின் அக்கறை இன்னமும் போதாது என்கிறார்கள்.

தமிழகத்தில் 2010-க்குப் பிறகுதான் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவியது. இதை ஏற்படுத்தியது கூட தனியார் மருத்துவமனைகள் தான். அப்படியிருந்தும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதேபோல்தான், மருத்துவ மாணவர்களின் உடற் கூறு ஆய்வுக்குத் தேவையான மனித உடல்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்குக் காரணம் உடல் தானம் குறித்த விஷயங்களில் அரசு அக்கறை எடுக்காமல் இருப்பதே.

மேலை நாடுகளில், மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகளை தானம் செய்யவும், இறந்த பிறகு உடல் தானம் செய்யவும் அநேகம் பேர் முன் வருகின்றனர். ஆனால், தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இன்னமும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.


மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் சம்மதிக்க வேண்டும். ஆனால், இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க விரும்புவோர், தாங்கள் உயிருடன் இருக்கும் போதே அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவைக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானது.

இதற்கென அரசு மருத்துவக் கல்லூரி உடற் கூறு கழகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் போதும். நேரில் வரமுடியாமல் சிகிச்சையில் இருப்பவர்களிடம் மருத்துவமனையில் இருந்தபடியே ஒப்புதல் கையெழுத்துப் பெற்றும் விண்ணப்பத்தை வழங்க முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை முன்பைவிட உயர்ந்திருந்தாலும், ஒப்புதல் அளித்தபடி உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. நூற்றுக்கு ஐந்து சதவீதம் பேரது உடல்கள் மட்டுமே ஒப்புதல் அளித்தபடி மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படுகின்றன. எஞ்சியவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள், சம்பிரதாய சடங்குகளைச் சொல்லியும், சென்டிமென்டான விஷயங்களைப் பேசியும் எரிக்கவோ புதைக்கவோ செய்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற சமயங்களில், இறந்தவர் முன்பே ஒப்புதல் அளித்திருந்த விண்ணப்பத்தின்படி அவரது உடலை கேட்டு பெறுவதற்கான முயற்சிகளை மருத்துவக்கல்லூரி உடற் கூறு கழகம் எடுப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தந்தால் ஏற்றுக் கொள்வோம்; தராவிட்டால் அலட்டிக் கொள்ளமாட்டோம் என்ற மன நிலையிலேயே இருக்கிறார் கள். இதற்குக் காரணம் உடல் தான திட்டத்தில் உள்ள குறைபாடுகளே.

இறந்தவரின் உடலை வாரிசுகள் ஒப்படைக்க வந்தாலும் அதை எடுத்துக் கொண்டு வருவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. சம்பந்தப்பட்டவர்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டுவந்தால் தான் உண்டு. உடல் தானம் பெறுவதற்கான விண்ணப்பங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு பகுமானமாக வழங்கும் அரசு, அந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குவதில்லை.

உடல் தானம் கொடுக்க விருப்பமாக இருந்தாலும் அதற்கான வழி முறைகள் தெரியாததால் மக்கள் சோர்ந்து விடுகிறார்கள். 15 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 600 பேர் மட்டுமே மருத்துக்கல்லூரிகளுக்கு உடல் தானம் வழங்கியிருக்கின்றனர். வடக்கில், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது உடல்களை தானமாக தந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் இப்படியான பிரபலங்கள் உடல் தானம் அளிப்பது மிகவும் அரிது. உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும் சுகாதாரத்துறையும் போதிய கவனம் செலுத்தவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் உடல் தானம் கொடுப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. உடல் உறுப்பு தானம் பெறுவதில் காட்டும் அக்கறையில் 10 சதவீதம்கூட உடல் தானம் பெறுவதில் காட்டப்படுவதில்லை.

மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்படும் உடல்கள் உரிய முறையில் பதப்படுத்தப்படும். இவை 15 ஆண்டுகள் வரை கெடாது. இந்த உடல்களைக் கொண்டு, மருத்துவம் படிக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு உடலின் பாகங்கள் குறித்து வகுப்பு நடத்தப்படும். பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் முறைகள் குறித்துக் கற்றுக் கொடுக்கப்படும்.

அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆண்டுக்கு சராசரியாக 12 உடல்கள் தேவைப்படும். அதைவிட  கூடுதலாக பெறப்படும் உடல்களை மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்புகின்றனர். சென்னை, சேலம், கோவை, மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளுக்கு உடல்கள் கிடைப்பது பற்றாக்குறையாகவே உள்ளது.

உடல் தானம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி?

உடல் தானம் செய்வதற்கான விண்ணப்பங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உடற் கூறு கழகத்தில் இலவசமாக கிடைக்கும். உடல் தானம் செய்ய விரும்புவோர், தனது இறப்புக்குப் பிறகு தனது உடலை தானம் தர முழு சம்மதம் என படிவத்தைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். இதில் இரண்டு சாட்சிகளும் கையெழுத்திட வேண்டும். கூடவே, தனது அங்க அடையாளங்களைத் தருவதுடன் தனக்கு ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட எவ்வித தொற்றும் இல்லை எனவும் மனுதாரர் உறுதியளிக்க வேண்டும். மாற்றும்  தங்கள் அருகாமையில் உள்ள நோட்டரி  பப்ளிக்கில் (Notary Public) உறுதிமொழி பத்திரம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.


கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்ட போலீஸ் வழக்குகள் இருக்கும் உடல்களை தானமாக தரமுடியாது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ தபாலிலோ மருத்துவக்கல்லூரி உடற் கூறு கழக தலைவருக்கு அனுப்பலாம். இறந்தவரின் உறவினர்களே அவரது உடலைக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அப்போது, மருத்துவர் அளித்திருக்கும் இறப்புச் சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும். தானம் தர முன்பே ஒப்புதல் வழங்காமல் இறந்துவிட்ட ஒருவரது உடலை வேறு யாரும் தானமாக தரமுடியாது.


~ மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment