Thursday, January 15, 2015

முக்கனி சங்கமம் சுகுணா புரம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு

தமிழ்நாட்டில் பாசத்திற்கும் ஒற்றுமைக்கும் கோயமுத்தூரை ஒரு முன்னுதாரணமாக சொல்லலாம். அந்த சிறப்பும் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் சுகுணா புரம் பகுதி மக்களாலேயே வந்தது என்பதை சொன்னால் அது மிகையாகாது. கோவைக்கு இப்படி ஒரு தனி சிறப்பை தேடிக் கொடுத்த அந்த சுகுணா புரம் மக்களிடையே அப்படி என்ன ஒரு தனித்துவம்.




இதோ சுகுணா புரத்தின் வரலாறு...


நாற்பது வருடத்திற்கு முன்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தவர்களும் சேர்ந்து சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கும் சுகுணா புரத்தில் குடிநீர் வசதி, கால்வாய் வசதி, மின்சாரவசதி போன்ற மிக அத்தியாவசியமான தேவைகள் முற்றிலும் இல்லாத ஒரு கிராமமாகவே இருந்தது. குடிக்கும் தண்ணீர் வேண்டுமானால் 10 கிலோமீட்டர் வரை கரடு முரடான சாலையில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை இருந்து வந்தது. கோவில்கள், பள்ளி என எதுவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் சுகுணா புரம் மக்கள் தம்முடைய அத்தியாவசிய தேவைக்காக அரசாங்கத்திடம் பல மனுக்கள் கொடுத்தனர் ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை .


இந்த சூழலில்தான் மும்மதத்தவர்களும் ஒன்று கூடி முக்கனி வாலிபர் முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல போராட்டங்களுக்கு இடையில் சட்டப்பூர்வமாக அத்தனை வசதிகளையும் பெற்றுக் கொண்டார்கள். இந்தச் சூழலில் தான் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என இவர்களுக்கிடையில் சகோதரத்துவம் அமைந்தது. மதங்களாலும், இனத்தாலும் அப்பகுதி மக்கள் வேறுபட்டிருந்தாலும், குணத்தாலும் அன்பின் ஒற்றுமையாலும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.








சுகுணா புரத்தில் மூன்று மதத்தினரும் ஒன்று கூடியே கோவில், மசூதி, திருச்சபைகள் கட்டியுள்ளனர். மூன்று சமயத்தினரின் கல்லறைகளும் ஒன்று சேர்ந்து இங்கு இருப்பது எந்த ஊர் மக்களிடையேயும் இல்லாத மிக உயர்ந்த ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.


அது மட்டுமா ? எந்த ஒரு பண்டிகையானாலும் ஜாதி மத பேதம் இல்லாமல் மும்மதத்தவரும் ஒன்று கூடியே தான் கொண்டாடுவார்கள். அதுமட்டும் இல்லை, ஒரு மதத்தவரின் வீட்டு குடும்ப நிகழ்ச்சி என்றாலும் அதில் மற்ற மதத்தவரின் பங்கு கண்டிப்பாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இஸ்லாமியர் யாரேனும் காலமானால் சடலத்தை நல்லடக்கம் செய்வதில் இந்து சமயத்தினரின் பங்கும் இருக்கும். இந்து சமயத்தினரின் வீட்டு திருமணம் என்றால் மற்ற மதத்தினரின் பங்கும் கலந்திருக்கும் .


ரமலான் நோன்பு இருக்கும் 30 தினங்களும் மற்ற மதத்தினர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீதி வீதியாக பாட்டுப்பாடி நோன்பிருக்கும் இஸ்லாமியர்களை எழுப்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கோவை சுகுணா புரத்து மக்களின் மனித நேயத்தையும் மனித ஒற்றுமையையும் அதிக அளவில் நாம் அறிந்திராதது நமது அறியாமையையே வெளிப்படுத்துகிறது .






1998 இல் கோவையில் நடந்த மிகப்பெரிய மதக்கலவரத்தில் இப்பகுதி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வந்த கலவரக்காரர்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மூன்று மதத்தினரும் ஒன்று கூடி விரட்டி அடித்த மக்கள் இவர்கள். அப்படியிருக்க இன்றும் மதம் ஜாதி என உயிரை விடும் மக்களை நாம் மூடர்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது...?


சுகுணா புரத்தில் இன்று பொங்கல் திருநாளில் மூன்று மதத்தினரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடியது மதநல்லிணக்கத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இருந்தது.




மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இந்த பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அப்பகுதி மக்கள் கூறும் பொழுது "கடந்த நாற்பது வருடத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் இருந்த இளைஞர்கள் கூடி உருவாக்கிய முக்கனி முன்னேற்ற சங்கமே இன்றுவரை மதங்களை கடந்து ஒற்றுமையுடன் வாழ வழிக்காட்டி உள்ளது. சமூகத்தின் மீது உள்ள அக்கறையினாலும், கறைகளை துடைப்பதற்காகவும் நாங்கள் எடுத்துக்கொண்ட தற்காலிக தீர்வு அல்ல. இது முழுக்க முழுக்க மனமாற்றம் ஒன்றே. மதத்தாலும் ஜாதிகளாலும் பிரிந்து இருக்கும் சமூகத்தை மாற்ற வேண்டும் ; ஜாதி மதம் என்பது தனிமனித ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டி உருவாக்கப்பட்டதே தவிர மனிதர்களிடையே பிரிவினையை உண்டாக்குவதற்காக அல்ல என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து இங்கு வாழ்கிறோம்", என்று அப்பகுதி மக்கள் கூறும் பொழுது நமது உடலில் புது ரத்தம் ஊறிய உணர்வு ஏற்பட்டது .


~மகேந்திரன்.

No comments:

Post a Comment