இன்று மே-28 உலக பட்டினி தினம் ...
இன்று எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ள விருப்பப்படுகிறேன் . இது ஒரு விழிப்புணர்வு பதிவாகவும் இருக்கும் என்றே நினைக்கிறேன் .
இன்று மாலை 5 மணிக்கு என் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல வெளியே வந்ததும் நான் அதிரும் படியான, அருவெறுப்பான ஒரு காட்சியை பார்க்க நேர்ந்தது.
என் எதிரே இருந்த குப்பை தொட்டியில் கிடந்த எச்சில் இலையில் இருந்த உணவுகளை ஒருவர் வழித்து வழித்து எடுத்து அந்த குப்பை தொட்டிக்கு அருகே கீழே அமர்ந்து இருந்த தன் மனைவிக்கு கொடுத்து தானும் அந்த எச்சில் உணவை உண்ணும் காட்சியை கண்டு என் மனமும் கண்களும் கலங்கியது .
அவர்கள் அந்த உணவை உண்ணும் அதே நேரத்தில் தெரு நாய் ஒன்று அந்த குப்பை தொட்டிக்குள் தாவி குதித்து எதையோ திங்க ஆரம்பித்தது. நாயும் மனிதனும் ஒரே குப்பை தொட்டியில் உணவிற்கு போட்டி போட்டு கொண்டு ...
ஐயோ ..!
என்ன கொடுமை இது..!
அந்தக் காட்சியை கண்டதும் என் கண்களும் , கால்களும், மனமும் அந்த இடத்தை விட்டு நகர வில்லை...
அடுத்த நொடி என்னை அறியாமலேயே வாய் விட்டு கத்தி விட்டேன் "ஐயா இங்கே வாங்க அங்கே என்ன செய்யறீங்க" என்று . என் குரலைக் கேட்டதும் அந்த வழியில் சென்றவர்கள் எல்லோரும் திரும்பி பார்க்கும்படி ஆகிவிட்டது. நான் இவரைத்
தான் கூப்பிடுகிறேன் என்று தெரிந்ததும் அவரவர் அவர்களது போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டனர் . அந்த நாயும் ஓட்டம் பிடித்துவிட்டது .
ஆனால் , குப்பைத் தொட்டியில் உணவை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மட்டும் திரும்பவே இல்லை. மீண்டும் அவரருகே சென்று "என்ன செய்யறீங்க இங்கே" என்று கேட்டதும் அவர் தன் தலையை கவிழ்த்தி அழ ஆரம்பித்துவிட்டார் . "பசிக்கின்றதா" என்றேன் "ஆமாம் " என்றார் .
"என்னோடு வரிங்களா உங்களுக்கு சாப்பாடு வாங்கி தரேன்" என்றதும் மௌனமாகவே நின்றார். அவர் முதுகில் லேசாக தட்டி 'வாங்க போகலாம் , வண்டியில் ஏறுங்க" என்றேன். கண்கள் கலங்கியவாறே வண்டியில் ஏறிக்கொண்டார்.
அடுத்த தெருவில் ஒரு அசைவ உணவகம் இருந்தது. உள்ளே நான் செல்ல அவர் உள்ளே வராமல் வெளியவே நின்றார். "அட வாங்க அண்ணே... உள்ள போகலாம்" என்றேன். அவர் கண்கலங்கியவாறே என்னை பின் தொடர்ந்து உள்ளே வந்தார். உள்ளே வந்தவர் தரையில் உட்கார "டேபிளில் உட்காருங்க" என்று நான் சொன்னேன். அந்த டேபிள் சர்வர் என்னிடம், "அண்ணே அவரை இங்கே உட்கார சொல்லாதீங்க வெளியவே நிற்க சொல்லுங்க . அவர் உடை உடல் எல்லாம் எவ்வளவு அழுக்காக இருக்கு பாருங்க , மற்ற வாடிக்கையாளர்கள் இவரை பார்த்தால் சங்கடப்படுவார்கள்" என்றார். எனக்கு அந்த சர்வர் சொன்னதை கேட்டதும் கோபம் வந்தது .
அங்கு நடந்ததை பார்த்துக்கொண்டு அதே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றொரு வாடிக்கையாளர் , அந்த சர்வரிடம், "பரவாயில்லை அவரை சாப்பிட சொல்லுங்க. நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்" என்றார்.
ஒருவழியாக அவருக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். சுட சுட வந்த பிரியாணியை இலையில் போட்டு அந்த சர்வர் பரிமாற ஆரம்பித்தார். கண்ணில் கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் முன் தயக்கத்துடன் "ஐயா, என் மனைவியும் பட்டினியா இருக்கா" ... என்றார் . சர்வரிடம் இன்னொரு சிக்கன் பிரியாணி பார்சல் சொல்லி விட்டேன். நீங்க சாப்பிட்டு போகும் போது அவங்களுக்கு எடுத்துட்டுப் போயிடலாம்." என்றேன். அவர் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை. துடைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தார். பில் வந்தது ஒரு பிரியாணி 90 இரண்டு பிரியாணிக்கு 180 என்று இருந்தது .
நான் பணம் எடுத்து கொடுக்கும் முன் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த நபர் "அண்ணா ஒரு பிரியாணிக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன்" என்று 90 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றார் . நான் மீதம் 90 ரூபாயை எடுத்து கவுண்டரில் கொடுக்கவும் அந்த உணவகத்தில் உள்ள கேஷியர், "40 ரூபாய் மட்டும் கொடுங்க அண்ணா . அடுத்தவர் பசியை தீர்க்கும் உங்கள் இந்த பணியில் எங்கள் பங்காக மீதியை நாங்கள் கழித்து கொள்கிறோம் " என்றார்.
ஒருவரது பசியை போக்குவதில் எவ்வளவு சந்தோசம் நிறைந்து இருக்கிறது என்று , அந்த கேஷியர் என் முன்னே மற்றவரிடம் சொல்லும் போது அவர் முகத்தில் 100 வாட்ஸ் பல்ப் எரிந்தது.
இன்று உலக பட்டினி தினம் இந்த நாளில் நான் முன்னெடுத்த இந்த சிறிய பணியில் என்னோடு கைகோர்த்து வந்த அவர்களை கட்டாயம் என்னால் எப்போதும்... ஏன் உங்களாலும் கூட மறக்க முடியாது.
இது போன்று நிகழ்வை குறும்படங்களில் பார்த்து இருக்கின்றேன். ஆனால் அது எல்லாமே நடிகர்கள் நடிப்பில் எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கும் . ஆனால் என் நிஜ வாழ்வில் நடந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்திருக்கிறது.
மனிதம் இன்னும் மரித்து விடவில்லை... இது போன்ற சிலரின் வடிவில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் ! இது பாரதியின் வரிகள். இதன் அர்த்தம் நமக்கு புரிந்தால் மட்டும் போதாது. நம் அடுத்த தலைமுறைக்கு , அதாவது நம் பிள்ளைகளுக்கு, பேர பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.
நம் திருவள்ளுவர் எழுதிய குறள் ஒன்று உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
அதன் பொருள் :-
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, நாம் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்ப நாம் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
-ஈரநெஞ்சம் மகேந்திரன்.
No comments:
Post a Comment