Saturday, April 03, 2021

பந்தமின்றி இருத்தல்







ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன்
அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி
இறங்கி, “இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான்.

அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான்.

அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களதுதவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்.அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.”  என்றான்.

இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென
பயப்படுகிறான்.

ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான்.

இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், “நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில்  இருக்கும் சுகங்களைஅனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியேஅல்ல.” என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை
துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து.
வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம்
வழிகள்…….. அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது
துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது.
தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.

ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல  வேலையாட்களைஅமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்?  அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.

அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது,
துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான்.

ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?

ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.

இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.

நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில்
எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும். என்றான் இளைஞன்.

அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை.

அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள்.என்றார்.

இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார்.

இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார்.

அரசன், “என்னால் எப்படி வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய
மனைவி, என்னுடைய குழந்தைகள்……. ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு
உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?” என்றான்.

இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என
எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடுமரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில்இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார்.

தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி
நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான்.

இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான
தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றிவிட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னைபோகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாகதேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.

ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.

அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும், என்றார்...

No comments:

Post a Comment