*தினம் ஒரு குட்டிக்கதை* .
ஒரு ஆசிரியர் பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார்.அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியாக இருந்தது.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும். எல்லோரும் ஒரு துண்டு தாளில் அவரவர் பெயரை எழுதி ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை எடுத்தார். அதில் தமிழ்ச்செல்வி என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் சந்தோஷப்பட்டார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து அப்பெட்டியிலுள்ள அனைத்து காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாகிய "தமிழ்ச்செல்வி" இன் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.
*நீதி*
*"தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக, சுயநலமற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்"*
No comments:
Post a Comment