Friday, February 15, 2013

அனைவருக்கும் மனமார்ந்த வணக்கம்...

03/02/12 காலை தினமலர் வாரப்பத்திரிக்கையில் வந்த செய்தியை தொடர்ந்து அலைபேசியில் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கியது. யார் யாரோ வாழ்த்தினார்கள். என்னவெல்லாமோ சொல்லி வாழ்த்தினார்கள். நூறாண்டுகள் இல்லை இருநூறாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறார்கள். கடவுள் என்றார்கள். மனிதாபிமானத்தின் மறு உருவம் என்றார்கள். இரக்கத்தின் இன்னொரு பெயர் என்றார்கள். எல்லா வாழ்த்துக்களும் என் செவிகளை தீண்டின. மனம் மட்டும் தவித்தது. இது ஒருவர் மட்டும் செய்யும் செயலோ சாதனையோ இல்லையே.... ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தாங்கள் அரவணைத்தால், தங்கள் பெற்றோரை தாங்கள் அரவணைத்தால் இது போன்ற செயல்களுக்கு இடமே இல்லையே. ஆதரவற்றவர்கள் என்பதே இல்லாமல் இருக்குமே.

இதை தொடர்ந்து சில செயல்கள் மனதுக்கு சற்று இதமளித்தது. அந்த வாரப்பத்திரிக்கையை பார்த்த சில இளைஞர்கள் இனி தாங்களும் இது போல் செயல் பட போவதாக தெரிவித்தனர். ஈரநெஞ்சம் போல் ஒரு அமைப்பை உருவாக்கி தாங்களும் தங்களால் இயன்ற வரையில் தங்கள் கடமையை செய்யப்போவதாக தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பள்ளிகளில் இந்த கட்டுரையின் சாராம்சம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் குழந்தைகளும் அனைவரும் தாங்கள் தங்கள் பெற்றோரை கை விட்டு விடாமல் காலம் முழுதும் அரவணைத்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

கடந்த ஐந்து நாட்களாக வீதியில் விடப்பட்ட தாயை இந்த கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் தங்களது தாயை அழைத்துக்கொண்டு சென்றார்கள் என்பதை கேட்க்கும் போது தினமலரின் கட்டுரையின் வெற்றியை உணர்ந்தேன்.

எனக்கு அழைத்த அநேகம் பேர் 70 வயதை கடந்த தாத்தா பாட்டி, அந்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டிலும் தனிமை என்ற பயமே கொல்கின்றதை முதியவர்களின் கண்ணீரால் உணரமுடிந்தது.

என்னை வாழ்த்தியவர்களில் ஒருவர் மட்டும் சொன்னது மனதில் பதிந்தது. மனித நேயம் என்பதே மறைய வேண்டும், உங்கள் பாரம் குறைய வேண்டும் என்றார் அவர். ஆமாம் அனைரும் தங்கள் குழந்தைகளையும், தங்கள் பெற்றோர்களையும் பாசமுடன் பராமரித்து வந்தால் தங்கள் கடமையை சரியாக செய்தால் ஆதரவற்றவர்கள் என்பவர்களே இருக்க மாட்டார்கள். பிறகு எதற்கு மனித நேயம் தேவைப்படும்.? அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அதுவே என் செயல்களுக்கு கிடைக்கும் வெகுமதியாக நான் கருதுகிறேன்.

நன்றி தினமலர்ருக்கு
நன்றி மனம் மாற்றிய மனிதர்களுக்கு
நன்றி என்னை பெற்ற அம்மா அப்பா அவர்களுக்கு
நன்றி என் நண்பர்களுக்கு
நன்றி ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும்
நன்றி ஈரநெஞ்சம் கொண்ட அனைவருக்கும்
வணங்குகிறேன்...

~மகேந்திரன்

2 comments:

  1. உங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம் என்பதே பெரும் மகிழ்ச்சி நண்பரே.....

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஈர நெஞ்சம் மகி சார் ,

    தங்கள் பெற்றோரை பிள்ளைகள் பார்த்துகொண்டால் பல அவலங்களை தவிர்க்கலாம் .

    ""எனக்கு அழைத்த அநேகம் பேர் 70 வயதை கடந்த தாத்தா பாட்டி, அந்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டிலும் தனிமை என்ற பயமே கொல்கின்றதை முதியவர்களின் கண்ணீரால் உணரமுடிந்தது.""

    எவ்வளவு கொடுமையான விஷயம் .

    ReplyDelete