Friday, June 28, 2013

"...சாகரின் மறு பிறப்பு கிடைத்தது உறவு..."



"...சாகரின் மறு பிறப்பு கிடைத்தது உறவு..."

தன் குடும்பம் மனைவி மக்கள் நலனுக்காக வறுமையைப் போக்க கால்வயிற்று கஞ்சிக்காக பிழைப்பைத் தேடி உறவினர்களை விட்டுப் பிரிந்து ஊர்விட்டும் கூட இல்லை, நாடு விட்டு நாடு வந்தவர் தான் சாகர். அப்படி வந்த சாகர் இரண்டு வருடத்திற்கு முன்னர் காவல்துறையினரால் ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப் பட்டிருந்தார். காரணம், சாலையோரமாக மனநலம் பாதித்து சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் இவர் யார் என்ன விபரம் என்று தெரியவில்லை என்றும் இவருக்கு பாதுகாப்பு கொடுக்கவும் அழைத்துவந்து சேர்த்ததாகத் தெரிந்தது.

ஆரோக்கியமான ஒருவருக்கு அடுத்த மூன்று நாளில் கூட மனநலம் பாதிக்க நேரிடும். அதற்க்குத் தூக்கமின்மையொரு காரணம். இப்படித்தான் சாகருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். காப்பகத்தில் உள்ள அன்பும் அரவணைப்புமே சாகருக்கு பாதி வைத்தியமாக இருந்தது. அதுபோக காப்பகதிற்கென வரும் மருத்துவரின் சிகிச்சையிலும் மூன்று மாதத்திற்குள்ளாக சாகர் சகமனிதரைப் போல மாறினார், ஆனால் அவருக்கு நேப்பாள மொழி மட்டும் தான் தெரிந்திருந்தது, அதனைக்கொண்டு அவர் நேப்பாளி என்பது தெரியவந்தது, சாகர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மனநிலை பாதித்தவர்களுக்கு நல்ல பணியாளராக இருந்து வந்தார், காலப்போக்கில் அவருக்கு தனது குடும்பத்தின் நியாபகம் வரத் தொடங்கியது. ஓரளவிற்கு தமிழ் கற்றுக்கொண்ட சாகர் காப்பகத்தின் ஆய்வாளரிடம் நான் ஊருக்கு போக வேண்டும், எனக்கு மனைவி மக்கள் தாய்தந்தை சகோதரர் என உறவுகள் இருக்கிறது என்றார், ஆனால் சாகர் இந்தியர் இல்லாத காரணத்தினாலும், நேப்பாளி என்ற தக்க ஆவணம் இல்லாததாலும், மனநோய் பாதிக்கப்பட்டு இருந்தமையாலும் இவரை விடுவிக்க முடியாத நிலை காப்பக நிர்வாகத்திற்கு இருந்தது.

தனது நாட்டிற்கு போக முடியாத சூழலில் தான் எங்கு இருக்கிறோம் என்ற நிலை அறியாது, இந்த காப்பகத்திலேயே காலம் போய்விடும் என்ற முடிவில் வாழ்கையை நகர்த்த துவங்கிவிட்டார். அப்போது தான் மகி மகேந்திரனுக்கு (எனக்கு) சாகரின் தொடர்பு கிடைக்க நேர்ந்தது. நான் சாலையோரமாக ஆதரவு இல்லாத முதியவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலரைக் காப்பகத்திற்கு அழைத்து வருவதையும், அழைத்து வந்தவர்களை அவர்களின் உறவினர்களைத் தேடிக் கண்டு பிடித்து குடும்பத்துடன் இணைத்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதையும் பார்த்து சாகர் என்னிடம் வந்து தனக்கென்று உறவுகள் இருப்பதைக் கூறி தன்னையும் தனது உறவினருடன் சேர்த்து வைக்குமாறு கேட்டபோது காப்பகத்தின் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அவ்வப்போது காப்பக ஆய்வாளரிடம் சாகர் ஊர்திரும்பிச் செல்ல என்ன வழி என்பதைக் கேட்டும் வந்தேன், ஆனால் சாகருக்கு எந்த ஒரு சரியான ஆவணமும் இல்லாமல் ஊருக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஆவணங்களாக நேப்பாளி என்ற அடையாள அட்டை அல்லது நேப்பாளத்தில் உள்ள காவல்துறை ஒப்புதல் கடிதம் இருந்தால் தான் சாகரை விடுவித்து விடலாம், வேண்டுமானால் அந்த ஆவணம் கிடைக்க நீங்கள் முயற்சி எடுங்கள் நாம் சாகரை நேப்பாளம் அனுப்பிவிடலாம் என்றார். அதுமட்டும் அல்லாது காப்பகத்தின் முயற்சியால் ஒரு ஆங்கில நாளேட்டில் சாகரை பற்றியும் வெளி இட்டு அதில் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுக் கூறினார். சாகரிடம் என்னால் முடிந்ததை செய்கிறேன் கலங்கவேண்டாம் என்று ஆறுதல் கூறி வந்தேன். காலம் செல்லச் செல்ல காப்பகத்தில் இருப்பவர்கள் இறந்ததும் அந்த சடலத்தை நான் எடுத்து சென்று அடக்கம் செய்து வருவதையும் பார்த்து சாகருக்குப் பெரும் கவலை, எங்கே தானும் தனது குழந்தையை மனைவி, பெற்றோர்களைக் காணாமல் இறந்துவிடுவேனோ என்று என் கையை பிடித்து கலங்கும்போது அவரது மன வேதனையை என்னால் அவ்வப்போது உணரமுடிந்தது.

காப்பக ஆய்வாளர் அளித்த சம்மதத்தில் சாகருக்கு உறவை தேடும் முயற்சியில் இறங்கினேன். சமூக வலைத்தளமான முகனீல் உட்பட அனைத்து வழிகளிலும் சாகரைப் பற்றி அவர் கூறிய அந்த அரை குறை முகவரியை பதிவு செய்து, நண்பர்களிடம் சாகருக்கு உறவைத் தேடும் முயற்சி, இயலுமானவரை பகிர்ந்து கொண்டு உதவி செய்யுங்கள் என வேண்டினேன். அத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள முகவரி யாருக்கேனும் தெரிந்தால் எனது அலைபேசி எண்ணுடன் என்னிடம் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தேன். தொலைத்த உறவைத் தேடுகிறார், மனவேதனையில் அவர் மீண்டும் மனநோயாளி ஆகிவிடுவார் போல இருப்பதால் முடிந்த அளவு உதவுங்கள் எனவும் குறிப்பிட்டேன். இப்படிக் கேட்டதன் நொடியில், சாகரின் உறவைத் தேடித்தர நல்லுள்ளங்கள் அனைவரும் சுமார் ஆயிரக்கணக்கானோர் முகநூலில் தங்கள் பக்கத்தில் பகிர்ந்துக்கொண்டார்கள். அதன் பயனாக பதிவிட்ட சில நாட்களிலேயே நேப்பாளத்தில் இருந்து ஒரு காவல் அதிகாரி என்னுடன் தொடர்புக்கொண்டார். ஆனால் அவர் பேசிய பாஷை புரியவில்லை. என்னுடைய நண்பர்கள் செல்வி மாறன் மற்றும் சுதர்சனின் உதவியால் நேப்பாளத்துக் காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி, சாகரின் புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் காட்டி சாகருக்கு உறவு அங்கு இருப்பதை உறதி செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சாகர் இரண்டுவருடமாக காணவில்லை எனவும், அவரைத் தேடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது.

சாகரின் உறவினருடைய புகைப்படங்களை நேப்பாளத்துக் காவல்துறையிடம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் அவற்றை மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு சாகரிடம் காட்டிய போது சாகருக்கு அலாதி சந்தோசம். தனக்கு உறவு கிடைக்க பட்டது, ஊருக்குப் போகக்கூடிய வாய்ப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்தார். அடுத்தநாளே சாகரின் உடன் பிறந்த சகோதரர் சாகருடன் அலைபேசியில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. சாகர் சந்தோசத்துடன் பேசத் தொடங்கினார். நான் அதைக் கவனித்துக்கொண்டிருந்தேன் , ஆனால் அந்த சந்தோசம் சற்றுநேரத்திலேயே சுக்கலானது. முகம் வாடிப்போனது சாகருக்கு. காரணம் கேட்டபோது இடைப்பட்ட காலத்தில் சாகரது தந்தை சாகர் காணாமல் போன ஏக்கத்தில் இறந்துவிட்டதாகவும், குடும்ப வறுமையின் சூழ்நிலையில் சாகரது மனைவிக்கு மறுதிருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிந்தது. அதனை அடுத்து சாகர் மிகுந்த மன வேதனையில் மூழ்க, மீண்டும் உடனடியாக நேப்பாளம் காவல்துறையுடன் தொடர்புகொண்டு, சாகரை பற்றிய விபரங்கள் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைக்க தாங்களிடம் இருந்து ஒரு ஒப்புதல் கடிதமும் சாகருக்கு உண்டான ஏதேனும் ஒரு அடையாள அட்டையையும் அனுப்பும் படியும் கேட்டபோது, உடனடியாகக் காவல்துறையினர் சாகரின் சகோதரிடம் அவற்றைக் கொடுத்து கோவைக்கு அனுப்பி வைத்தார்கள்.

கோவைக்கு வந்த சாகருடைய அண்ணனை அழைத்துக்கொண்டு போய் சாகர்முன் நிறுத்தியதும் சாகருக்கு உயிர் பிச்சை கிடைத்த பூரிப்பு. அண்ணனும் தம்பியும் கட்டித்தழுவிய காட்சி அரியது. தனக்கு வாழ்க்கை இங்கேயே போய்விடும் என்ற முடிவில் இருந்த சாகருக்கு அண்ணனைக் காட்டியதும் இருந்த அந்த மன நிறைவான நிகழ்வைக் காண கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு காட்சியாய் இருந்தது. உறவை தேடிக் கொடுத்த என்னையும் சாகர் கட்டித்தழுவி முத்தமழையில் நனையவைத்து விட்டார். அதனைத் தொடர்ந்து சாகரின் அண்ணன் கொண்டுவந்த ஆவணங்களைக் காப்பக ஆய்வாளரிடம் ஒப்படைத்த பிறகு, காப்பக ஆய்வாளர் சாகரை விடுவிக்க ஒப்புதல் அளித்தார். சாகர் மனநிறைவுடன் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முறையில் இரண்டுவருடமாக பணிவிடை செய்துவந்ததை நினைவில் நிறுத்தி அங்கு இருப்பவர்கள் மனதார வாழ்த்தி வழி அனுப்பினார்கள். காப்பக ஆய்வாளரின் ஆசிர்வாததுடன் விடைபெற்ற சாகர் தனக்கு உயிர் தந்த தாயைப் போல எண்ணி என்னையும் வணங்கி என்னிடமிருந்தும் விடை பெற்றார்.

இன்னும் பல்லாயிரம் பேர் உறவைத் தொலைத்து விட்டு மீண்டும் சேர மாட்டோமா என்னும் ஏக்கத்துடன் தான் இருக்கின்றார்கள். நாம் சற்று முயற்சி எடுத்தோமானால் மீண்டும் கிடைக்காமல் போய்விடாது அவர்கள் வாழ்க்கைகளும்.

~மகேந்திரன்


1 comment: